Published : 03 Jan 2020 04:47 PM
Last Updated : 03 Jan 2020 04:47 PM

பயிற்சியின் போது கால்பந்து விளையாடத் தடை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் அதிரடி முடிவு

கிரிக்கெட் வீரர்கள் வார்ம்-அப் செய்யும் போது கால்பந்தாட்டமும் விளையாடும் பழக்கம் ஆதிகாலம் முதல் இருந்து வருவதுதான், ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இயக்குநர் மற்றும் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட், கால்பந்தை தடை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்த அதிரடி முடிவெடுக்கக் காரணம் என்ன? பயிற்சியின் போது இங்கிலாந்து வீரர்கள் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டதில் இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் காயமடைந்தார், தசை நார் கிழிந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து மட்டுமல்ல தொடர் முழுவதிலிருந்தும் பர்ன்ஸ் விலகியதே கால்பந்தாட்டத்திற்கு தடை விதிக்கக் காரணமாகும்.

இது முதல்முறையல்ல, 2018-ல் இலங்கையில் ஜானி பேர்ஸ்டோ கால்பந்து ஆடி காயமடைந்தார். ஜோ டென்லி, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரும் முன்பு கால்பந்து ஆடி காயமடைந்தது உண்டு.

ஆஷ்லி ஜைல்ஸ் இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் இயக்குநராகப் பொறுப்பேற்ற போதே பயிற்சியில் கால்பந்தாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அணி வீரர்களுக்கிடையே பிணைப்பு ஏற்படுத்த கால்பந்து பயிற்சி முக்கியமானது என்று ஜைல்சை மூத்த வீரர்கள் சமாதானப்படுத்தினர்.

ஆனால் 0-1 என்று தோல்விமுகம் காட்டும் போது கால்பந்தாடி பர்ன்ஸ் காயமடைந்திருப்பது ஆஷ்லி ஜைல்ஸின் உறுதியை மீண்டும் சோதனை செய்ய விதித்தார் தடையை.

வார்விக்‌ஷயர் அணியின் இயக்குநராக ஜைல்ஸ் இருந்த போது ஏற்கெனவே ஒருமுறை பயிற்சி நடவடிக்கைகளிலிருந்து கால்பந்தை ஒதுக்கித் தடை விதித்தார்.

ஜோப்ரா ஆர்ச்சரும் முழங்கை காயம் காரணமாக தொடரில் மீண்டும் ஆடுவது கடினம் என்று தெரிகிறது.

கால்பந்து வீரர்கள் பயிற்சியில் கிரிக்கெட் ஆடுகிறார்களா என்ன? கிரிக்கெட் வீரர்கள் மட்டும் ஏன் கால்பந்தாட்டம் ஆட வேண்டும்?! என்று ஜைல்ஸ் நினைத்து விட்டாரோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x