Last Updated : 03 Jan, 2020 11:46 AM

 

Published : 03 Jan 2020 11:46 AM
Last Updated : 03 Jan 2020 11:46 AM

தென் ஆப்பிரிக்க டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து ரோரி பர்ன்ஸ் விலகல்

ரோரி பர்ன்ஸ் : கோப்புப்படம்

கேப் டவுன்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஏற்கெனவே காயத்தால் பல வீரர்கள் ஓய்வில் இருக்கும் நிலையில் இப்போது பர்ன்ஸ் விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியைத் தரும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் மோசமாக பேட் செய்த நிலையில் ரோரி பர்ன்ஸ் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடி பேட் செய்து கவுரமான ஸ்கோர் எடுத்தார்.

இதனிடையே இங்கிலாந்து வீரர்கள் கால்பந்து விளையாடி பயிற்சி எடுத்தபோது, ரோரி பர்ன்ஸின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோதிலும் தொடர்ந்து வலியும், வீக்கமும் இருந்தது. இதையடுத்து, பர்ன்ஸ் காயம் குறித்து எக்ஸ்ரே செய்து பார்த்தபோது, அவரின் கணுக்காலில் தசைநார் கிழிந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, சில வாரங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், ரோரி பர்ன்ஸ் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், "இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் கணுக்கால் காயம் காரணமாகத் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க வேண்டியிருப்பதால், அவருக்குப் பதிலாக டாம் சிப்ளி சேர்க்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுப் பந்து வீச முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இருப்பினும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதால், அவரின் நிலை குறித்து இறுதியாகத் தெரிவிக்கவில்லை. அதேசமயம் காயம் காரணமாக அணியில் இருந்து சமீபத்தில் விலகிய வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட் காயத்தில் இருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டதால், ஆர்ச்சர் விலகினால் மார்க் வூட் சேர்க்கப்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x