

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் டிபன்டரான சுனிதா லக்ரா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளார் சுனிதா லக்ரா.
28 வயதான சுனிதா லக்ரா 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கமும், 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கமும் வென்ற இந்திய அணியில் முக்கிய அங்கமாக இருந்தார். மேலும் 2018-ம் ஆண்டில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுனிதா லக்ரா தலைமையில் விளையாடிய இந்திய அணி 2-வது இடம் பிடித்திருந்தது. இந்திய அணிக்காக இதுவரை 139 ஆட்டங்களில் விளையாடி உள்ளார் சுனிதா லக்ரா.
ஓய்வு குறித்து சுனிதா லக்ரா கூறும்போது, “சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதால் இந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. 30 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றிருந்தது. அந்தத் தொடரில் விளையாடியது மிகவும் அதிர்ஷ்டம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருக்க விரும்பினேன்.
ஆனால் எனது முழங்கால் காயம் அந்த கனவை கலைத்து விட்டது. காயத்துக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். நான் முழுமையாக குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியவில்லை. எனினும் குணமடைந்த பின்னர் உள்ளூர் ஹாக்கியில் விளையாடுவேன்”என்றார்.
- பிடிஐ