

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நாளை அதிகாலை 3.30 மணி அளவில் தொடங்குகிறது.
3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டில் 296 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்பர்ன் நகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 247 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனால் டெஸ்ட் தொடரை 2-0 என தனதாக்கிக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் சிட்னியில் நாளை களமிறங்குகிறது.
நியூஸிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்வதில் ஆஸ்திரேலியா முனைப்பு காட்டக்கூடும். சிட்னிஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கக்கூடியது என்பதால் ஆஸ்திரேலிய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கக்கூடும். சுழலில் அனுபவ வீரரானநேதன் லயனுடன் மிட்செல் ஸ்வெப்சன் அறிமுக வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
நியூஸிலாந்து அணியை பொறுத்தவரையில் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பார்மின்றி தவிப்பது அணியின் செயல் திறனை வெகுவாக பாதித்துள்ளது. டாம் பிளெண்டலின் பேட்டிங் மட்டுமே ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
மெல்பர்னில் தொடக்க வீரராக களமிறங்கி பிளெண்டல் சதம் அடித்தார். இதனால் அவர் மீண்டும் அதே இடத்தி களமிறங்க வாய்ப்புள்ளது. ஆடுகளம் சுழலுக்கு சாதகமானது என்பதால் நியூஸிலாந்து அணியும் இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் மிட்செல் சாண்ட்னருடன், வில் சோமர்விலே இடம் பெறக்கூடும். மேலும் வேகப்பந்து வீச்சு துறையில் லூக்கி பெர்குசன் களமிறங்க வாய்ப்பு உள்ளது.