

ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் அவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் பயணம் செய்ததுதான் தோல்விகளுக்குக் காரணம் என்ற கருத்தை கிளார்க், வார்னர், ஜான்சன் ஆகியோர் காட்டமாக நிராகரித்தனர்.
நியூஸ் லிமிடட் குழும செய்தி ஊடகங்களில் ஆஸ்திரேலிய அணியின் கவனச் சிதறலுக்கு குடும்பமே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப் பட்டது.
இதற்கு மைக்கேல் கிளார்க் கடுமையாக பதிலளிக்கும் போது, “load of shit” என்று வர்ணித்துள்ளார்.
டெலிகிராப் பத்தி எழுத்தாளர் ரெபக்கா வில்சன், எழுதும் போது, குடும்பத்தினருடன் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக நேரம் செலவழித்ததாக குறிப்பிடதை எதிர்த்த மிட்செல் ஜான்சன், “நான் ரெபக்கா வில்சனுடன் விவாதிக்கவில்லை. அவரது கருத்து அராஜகமானது என்பதை மட்டும் நான் கூறிக்கொள்கிறேன். ஒவ்வொரு விநாடியையும் நாங்கள் குடும்பத்தினருடன் கழித்ததாக அவர் கூறுகிறார், இது தவறு என்பதுடன் இது அவருக்கு சம்பந்தமில்லாத ஒன்று. ஆனால் அவருக்கு தெரியவேண்டுமென்றால் என் மனைவியிடமும் குழந்தையிடமும் கேட்க வேண்டியதுதானே? விளையாட்டைப் பற்றி மட்டுமே அவர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
அதே போல் ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் இந்நாள் வர்ணனையாளர் இயன் ஹீலியும் வாழ்க்கைத் துணையுடன் ஆஷஸ் தொடருக்கு வருவது பற்றி தன் ஐயங்களை டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக எழுப்பியிருந்தார்.
இது பற்றி டேவிட் வார்னர் கூறும்போது, “இயன் ஹீலியிடம் இதுபற்றி அன்று பேசினேன். இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு எங்கள் வாழ்க்கைத் துணை வரப்போவதில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. ஏனெனில் அங்கு அவர்களைக் கூட்டிச் செல்வதற்கு சரியான சூழ்நிலை அங்கு இல்லை, தென் ஆப்பிரிக்க ஏ அணி வீரர்கள் நச்சு உணவு உட்கொண்டு மருத்துவமனையில் இருக்கும் செய்தியை இப்போதுதான் பார்த்தேன்.
ஆனால் எனக்கு, கிரிக்கெட் பயணத்தின் போது என் குடும்பத்தினர் என்னுடன் இருப்பது பிடித்தமானதே. பணிக்குச் சென்று திரும்புபவர்கள் அவர்கள் குடும்பத்தினரை மாலையில் வந்து பார்க்கும் போது மகிழ்ச்சி அளிப்பதில்லையா? அன்று எங்களுக்கு மோசமான தினமாக அமைந்தது, நாங்கள் ஓய்வறையில் இது குறித்து பேசினோம். வாழ்க்கைத் துணை, குழந்தை அருகில் இருப்பது ஒரு அருமையான விஷயம்.
வீரர்கள் சரியாக ஆடாதபோது சில கதைகள் கசிவது சகஜமே. அதாவது குடும்பத்தினர் அருகில் இருந்தனர், வீரர்கள் பேசிக்கொள்வதில்லை போன்ற கதைகள் உருவாவது சகஜமே. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.” என்றார்.