Last Updated : 29 Dec, 2019 07:31 PM

 

Published : 29 Dec 2019 07:31 PM
Last Updated : 29 Dec 2019 07:31 PM

மீண்டெழுந்தது தென் ஆப்பிரிக்கா; ரபாடா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து: பாக்ஸிங் டே டெஸ்டில் முதல் வெற்றி

ரபாடா, நார்ட்ஜேவின் அபாரமான பந்துவீச்சால் செஞ்சூரியனில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி.

376 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து 93 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்து 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது, அந்த நடவடிக்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பாக்ஸிங்டே டெஸ்ட் வெற்றி பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் தென் ஆப்பிரிக்க அணி பல அணிகளுக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்டில் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பட்னலர், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, சாம் கரன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 204 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து அணி அடுத்த 64 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு புத்துயிர் ஊட்ட புதிய பயிற்சியாளராக மார்க் பவுச்சரும், பேட்டிங் ஆலோசகராக ஜேக் காலிஸும், தேர்வுக்குழுத் தலைவராக கிரேம் ஸ்மித்தும் நியமிக்கப்பட்டதற்குப் பின் கிடைத்த முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டெஸ்ட் போட்டி தொடங்கி 3 நாட்களில் அதாவது இன்னும் 2 நாட்கள் முழுமையாக மீதம் இருக்கும் நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணியைக் கவுரவமான ஸ்கோர் கிடைக்கச் செய்யக் காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக்கிற்கு வழங்கப்பட்டது.

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 284 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி 181 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 272 ரன்களில் 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது

இதையடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற 376 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி. 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒருவிக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது.

களத்தில் ஜோ பர்ன்ஸ் 77 ரன்களுடனும், டென்லி 10 ரன்களுடனும் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பர்ன்ஸ் 84 ரன்களில் நார்ட்ஜே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த கேப்டன் ரூட், டென்லியுடன் ஓரளவுக்கு நிதானமாக ஆடினார். இருவரும் பொறுமையாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 158 ரன்கள் வந்தபோது டென்லி 31 ரன்களில் பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி நடையைக் கட்டினார்.

4-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்டோக்ஸ், ரூட்டுடன் இருந்தார். இருவரும் சிறிது நேரமே களத்தில் இருந்தனர். ஸ்டோக்ஸ் 14 ரன்னில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் போல்டாகினார்.
இதன்பின்புதான் இங்கிலாந்து அணியின் சரிவு தொடங்கியது. அடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர்.

பேர்ஸ்டோ(9), பட்லர்(22), சாம் கரன்(9) ஆகியோர் விக்கெட்டுகளை ரபாடா தனது மின்னல் வேகப்பந்துவீ்ச்சில் கழற்றினார். அரைசதத்தை நோக்கி நகர்ந்த ரூட் 48 ரன்னில் நார்ட்ஜோ பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் 4 , பிராட் 6 ரன்னிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 268 ரன்களில் ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும், நார்ட்ஜே 3 விக்கெட்டுகளையும், கேசவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x