Last Updated : 28 Dec, 2019 03:47 PM

 

Published : 28 Dec 2019 03:47 PM
Last Updated : 28 Dec 2019 03:47 PM

ஒலிம்பிக் தகுதிச்சுற்று: ஜரீனை வீழ்த்தினார் மேரி கோம்; சலசலப்பில் முடிந்த ஆட்டம்;கைகுலுக்காமல் சென்ற வீராங்கனைகள்

ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்காக மகளிர் பிரிவில் நடந்த 51 கிலோ எடைப்பிரிவுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இளம் வீராங்கனை நிஹாத் ஹரீனை எளிதாக சாய்த்தார் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம்.

சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வைர தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் மகளிர் குத்துச்சண்டைக்கான தகுதி சுற்று அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெறுகிறது.

இந்த தகுதி சுற்றில் கலந்து கொள்ள உள்ள இந்திய வீராங்கனைகளை (51, 57, 60, 69, 75 கிலோ எடைப் பிரிவு) தேர்வு செய்வதற்கான ஆட்டங்கள் டெல்லியில் நடந்து வருகின்றன.இதில் 51 கிலோ எடைப் பிரிவில் 6 முறை உலக சாம்பியனான மேரி கோம் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான நிகாத் ஜரீன் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் இந்திய குத்துச்சண்டை சங்க தலைவரான அஜய் சிங், எந்தவித தகுதி சுற்றுகளும் இல்லாமல் நேரடியாக டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் மேரி கோம் பங்கேற்பார் என வெளிப்படையாக அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நிகாத் ஜரீன் வீராங்கனைகள் தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் எனவும் தனக்கும் மேரிகோமுக்கும் தகுதி சுற்று ஆட்டம் நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கும், இந்தியக் குத்துச்சண்டை சங்கத்துக்கும் கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்ட இந்திய குத்துச்சண்டை சங்கம் 51 கிலோ எடைப் பிரிவிலும் தகுதி சுற்று ஆட்டத்தை நடத்த முடிவு செய்தது. இதன் அடிப்படையிலேயே தற்போது தகுதி சுற்று நடந்தது.

மேரி கோம், நிகாத் ஜரீன் இருவருக்கும் இடையிலான ஆட்டம் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு வீராங்கனைகளும் ஆவேசமாக மோதினார்.

ஆனால் மேரி கோமின் அனுபவம் முன் நிகாத் தாக்குப்பிடிக்க முடியாமல் 9-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். போட்டி நடந்தபோதும் போட்டிக்கு வெளியேயும் இரு வீராங்கனைகளும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டி முடிந்தபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மேரி கோம் : படம் |ஏஎன்ஐ

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை நிகாத் ஜரீனுக்கு ஆதரவாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வந்திருந்தார்கள். போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் கண்ணீர் விட்டு அழுதனர்.

போட்டி முடிந்தபின் மேரி கோம், நிகாத் ஜரீன் இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளாமல் சென்றனர். நிகாத் ஜரீன் கட்டி அணைக்க முயன்றபோது, மேரிகோம் ஒதுங்கிச் சென்றார்.

இந்தப் போட்டிக்குப்பின் மேரி கோம் நிருபர்களிடம் கூறுகையில், " நான் சிறிது கோபப்பட்டுவிட்டேன். எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எல்லாம் நடந்து முடிந்துவிட்டதால் நான் கலைந்து செல்கிறேன். நான் அவருக்குச் சொல்வதெல்லாம் செயலில் காட்டிவிட்டு அதன்பின் ஜரீன் பேச வேண்டும். குத்துச்சண்டை வளையத்துக்குள் ஜரீன் என்ன செய்தார் என்பதைப் பார்த்தீர்கள்.

எந்த பிரச்சினையையும் நான் தொடங்கவில்லை. நான் போட்டிக்கு வருகிறேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. இதில் என் மீது எந்தத்தவறும் இல்லை, என்னை இதற்குள் இழுக்காதீர்கள்" எனத் தெரிவித்தார்.

ஜரீன் கூறுகையில், " மேரி கோம் நடத்தை மிகவும் மோசம். குத்துச்சண்டை வளையத்துக்குள் அநாகரீகமான வார்த்தைகளை பேசினார். அதுகூட சரி, நான் ஜூனியர் வீராங்கனை, போட்டி முடிந்தபின் பரஸ்பரம் கட்டி அணைக்க முன்வந்தால் அவர் ஒதுங்கிச்சென்றார், இதற்குமேல் நான் பேசவி்லலை" எனத் தெரிவித்தார்

சீனாவில் நடக்கும் தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்தியா சார்பில் மேரி கோம்(51கிலோ), சாக்ஸி சவுத்ரி(57 கிலோ), சிம்ரன்ஜித் கவுர்(60கிலோ), லவ்லினா போர்கோஹைன்(69 கிலோ), பூஜா ராணி(75 கிலோ) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x