Published : 28 Dec 2019 01:53 PM
Last Updated : 28 Dec 2019 01:53 PM

வாக்னரின் 200வது விக்கெட் ஸ்மித்; 4வது முறையாக இவரிடமே அவுட்:  மெல்போர்ன் டெஸ்ட்டில் அசைக்க முடியா இடத்தில் ஆஸி.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது, இதன் மூலம் ஆஸ்திரேலியா 456 ரன்கள் முன்னிலை பெற்று அசைக்க முடியாத இடத்தில் உள்ளது.

முன்னதாக நியூஸிலாந்து அணி கமின்ஸ், பேட்டின்சன் பந்து வீச்சில் நொறுங்கி முதல் இன்னிங்சில் 148 ரன்களுக்குச் சுருண்டது.

இன்றைய தின முடிவில் முதல் இன்னிங்ஸ் சத நாயகன் ட்ராவிஸ் ஹெட் 12 ரன்களுடனும் மேத்யூ வேட் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாவது இன்னிங்சிலும் வாக்னர் சிறப்பாக வீசி வார்னர் (38), ஸ்மித் (7) ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லபுஷேன் 19 ரன்களில் ரன் அவுட் ஆக, பர்ன்ஸ் 35 ரன்களில் சாண்ட்னரிடம் வெளியேறினார்.

வாக்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200வது விக்கெட்டைக் கைப்பற்றினார். ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை அவர் 4வது முறையாக இந்தத் தொடரில் வீழ்த்தியுள்ளார். இம்முறையும் ஷார்ட் பிட்ச் பந்துதான் ஆனால் இது இடுப்புயரமே வந்தது இதை துடுப்பு முறை புல் ஷாட் ஆட முயன்றார் ஸ்டீவ் ஸ்மித் ஆனால் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் சவுத்தியிடம் கேட்ச் ஆனது.

சர் ரிச்சர்ட் ஹேட்லிக்குப் பிறகு 2வது அதிவேக 200 விக்கெட் மைல்கல்லை எட்டிய நியூஸி வேகப்பந்து வீச்சாளரானார் வாக்னர்.

ஸ்மித்தைத் தொடர்ந்து வீழ்த்தியது பற்றி வாக்னர் கூறும்போது, “உடனே ஸ்மித் மீது தான் ஆதிக்கம் செலுத்துகிறேன் என்று கூற முடியாது. காரணம் அவர் ஒரு தரமான வீரர். அவரை 4 முறை வீழ்த்தியது எனக்கு ஒரு கவுரவம். 200வது விக்கெட்டை இத்தனை நியூஸி. ரசிகர்கள் முன்னிலையில் எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x