Last Updated : 28 Dec, 2019 11:10 AM

 

Published : 28 Dec 2019 11:10 AM
Last Updated : 28 Dec 2019 11:10 AM

ஒரே நாளில் 15 விக்கெட் காலி: பிலாண்டர், ரபாடா வேகத்தில் 181 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து: முடிவை நோக்கி தெ.ஆப்பிரிக்க டெஸ்ட்

பிலாண்டர் மற்றும் ராபாடாவின் வேகப்பந்துவீச்சில் செஞ்சூரியனில் நடந்துவரும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு சுருண்டது.

தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணியும் 4 விக்கெட் இழந்தது. இதனால் ஒரே நாளில் இரு அணிகளிலும் சேர்த்து 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பிலாண்டர் ஓய்வு பெற இருப்பதால், அவரின் பந்துவீச்சில் ஆக்ரோஷம், துல்லியம் தென்பட்டது. பிலாண்டருக்கு ஒத்துழைத்து ரபாடாவின் அசுர வேகப்பந்துவீச்சு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கலங்கச் செய்தது.

26-ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்தது. பிலாண்டர் 24 ரன்களுடனும், நார்டேஜுவும் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் களமிறங்கினர். கூடுதலாக 11 ரன்கள் சேர்த்த நிலையில் பிலாண்டர் 35 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 84.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் சாம் கரன், கிறிஸ் பிராட் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. பர்ன்ஸ், சிப்லி ஆட்டத்தைத் தொடங்கினர். பிலாண்டரும், ரபாடாவும் தொடக்கத்தில் இருந்த மிகுந்த கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார்கள் இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் ரன் சேர்க்க முடியவில்லை.

பிலாண்டர் வீசிய 4-வது ஓவரில் பர்ன்ஸ் 9 ரன்னில் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரபாடா வீசிய 6-வது ஓவரில் சிப்லி 6 ரன்னில் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது.

கேப்டன் ரூட், டென்லி இருவரும் 3-வது விக்கெட்டுக்கு ஓரளவுக்கு நிலைத்து ஆடி விக்கெட் சரிவைத் தடுத்தனர். ஜோ ரூட் 29 ரன்களில் பிலாண்டர் பந்துவீச்சில் டீகாக்கிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 55 ரன்கள் சேர்த்தனர்.

ராபாடா வீசிய பவுன்ஸிரில் ஜோ ரூட்டின் ஹெல்மெட்டில் பந்துபட்டு தெறித்தது. இதில் ஜோ ரூட் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். பின்னர் அனைத்து வீரர்களும் வந்து ஆறுதல் தெரிவித்தனர், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரத்துக்குப்பின் மீண்டும் ரூட் பேட் செய்தார்.

அடுத்து வந்த பென் ஸ்டோட்க்ஸ் அதிரடியாக 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 35 ரன்கள் சேர்த்து, நார்ட்ஜே பந்துவீச்சில் வெளியேறினார். ஸ்டோக்ஸ், டென்லி கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர்.

142 ரன்களுக்கு 4-வது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து அணி. அதன்பின் வந்த வீரர்கள் அனைவரும் ரபாடா, பிலாண்டர் பந்துவீச்சில் சிக்கி, சரிந்தனர். பேர்ஸ்டோ(1), பட்லர்(12),சாம் கரன்(20), ஆர்ச்சர்(3), பிராட் (2), என வரிசையாக வெளியேறினார். கடைசி 6 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி 39 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது.

53.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 181 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பிலாண்டர் 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

103 ரன்கள் முன்னிலை பெற்று தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் தங்களை பந்துவீச்சில் மிரட்டியதற்கு பழிக்குப்பழியாக, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை பவுன்ஸரில் அலற விட்டனர்.

மார்க்ரம், எல்கர் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆன்டர்ஸன் வீசிய முதல் ஓவரிலேயே கால்காப்பில் வாங்கி மார்க்ரம் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹம்சா 4 ரன்னில் பிராட் பந்துவீச்சில் வெளியேறினார். 20 ரன்னில் டீக்காக்கையும், 22 ரன்னில் எல்கரையும் ஆர்ச்சர் தனது அதிவேகப் பந்துவீச்சில் ஆட்டமிழக்கச் செய்தார். 62 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

5-வது விக்கெட்டுக்கு வேன் டர் டுசன் 17 ரன்னிலும், நார்ட்ஜே 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர். தென் ஆப்ரிக்க அணி 175 ரன்கள் முன்னிலையுடன் பேட் செய்து வருகிறது.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற இருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்க அணியை 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி குறைந்த ஸ்கோரில் சுருட்டிவிட்டால் இங்கிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். இலக்கை துரத்தும் போட்டியில் இரு அணிகளும் கடுமையாக மோதும் என்பதால் ஆட்டத்தில் அடுத்துவரும் நாட்களில் முடிவு கிடைத்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x