Last Updated : 27 Dec, 2019 10:55 AM

 

Published : 27 Dec 2019 10:55 AM
Last Updated : 27 Dec 2019 10:55 AM

இந்து என்பதால் கனேரியா பாகுபாட்டுடன் நடத்தப்பட்டார்; அக்தர் ஆதங்கம்: உண்மை பேசியதற்கு நன்றி: கனேரியா

பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா : கோப்புப்படம்

கராச்சி

இந்து என்பதால் டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் அணியில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டார், அவர் அளிக்கும் உணவைக் கூட யாரும் விரும்பி சாப்பிடமாட்டார்கள் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஷோயப் அக்தர் பேசிய கருத்துக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள டேனிஷ் கனேரியா, நடந்தவை அனைத்தும் உண்மை, தன்னுடைய வாழ்க்கை நலம்பெற பிரதமர் இம்ரான் கான் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா கடந்த 2000 முதல் 2010-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் விளையாடியவர். 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கனேரியா 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற 2-வது இந்து வீரர் ஆவார். இதற்கு முன் கனேரியாவின் மாமா அனில் தல்பாத் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடியிருந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கிய கனேரியாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. அதன்பின் பலமுறை வீரர்களிடமும், வாரியத்திடமும் கனேரியா முயன்றும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஷோயப் அக்தருடன் கனேரியா :படம் உதவி ட்விட்டர்

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தனியார் சேனல் ஒன்றுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பேட்டி அளி்த்தார். அதில் அவர் கூறுகையில், " கனேரியா பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவதைப் பல வீரர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் கனேரியா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை யாருக்கும் பிடிக்கவில்லை, அவரின் பல்வேறு சாதனைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தது இல்லை. பல நேரங்களில் அவரின் திறமையை சக வீரர்களைக் கிண்டல் செய்துள்ளனர். பல நேரங்களில் கனேரியா அளித்த உணவைக்கூட சக வீரர்கள் சாப்பிட மறுத்திருக்கிறார்கள்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 3 அணிகள் மதவாதத்தைப் பற்றி பேசும்போது நான் சண்டையிட்டு இருக்கிறேன். அதாவது கராச்சியில் இருந்து வந்தவரா, பஞ்சாபியா, பெஷாவரைச் சேர்ந்தவரா என்று கேட்கும்போது நான் கோபப்பட்டுப் பேசி இருக்கிறேன். அணியில் இந்து மதத்தைச் சேர்ந்த கனேரியா இருந்தால் கூட அவர் அணிக்காகச் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்தானே.

ஆனால், கனேரியா உணவு கொண்டுவந்தால்கூட அவர் எப்படி உணவு கொண்டுவரலாம் என்று அணியில் மற்ற வீரர்கள் கேட்பார்கள். இதே கனேரியா இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியை வென்றுகொடுத்தவர்தானே.

பாகிஸ்தான் அணியில் விளையாடி ஏராளமான விக்கெட்டுகளையும், வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தவர்தானே.

கனேரியா முயற்சி இல்லாமல் நாங்கள் வென்றிருக்க முடியாது. ஆனால் பலரும் அவருக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கவில்லை. அணியில் இந்து வீரர் என்பதால் பாகுபாட்டுடன்தான் நடத்தப்பட்டார்" எனத் தெரிவித்தார்

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் உண்மைகளைப் பேசியதற்கு டேனிஷ் கனேரியா நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


" நான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அணியில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன் என்று அக்தர் சொன்னது அனைத்தும் உண்மைதான்.

என்னுடைய வாழ்க்கை இப்போது நல்லவிதமாக இல்லை. என் வாழ்வில் ஏற்பட்ட குழப்பங்களைக் களையப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் பல வீரர்களை, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகிகளைச் சந்தித்து எனது பிரச்சினைகளைக் களைய உதவி கேட்டும் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் வீரராக இன்றும் நான் பெருமை கொள்கிறேன்.ஆனால் இந்த நேரத்தில் எனக்குப் பாகிஸ்தான் மக்கள் உதவ வேண்டும் என்று கோருகிறேன்.

ஷோயப் அக்தரின் நேர்காணலைப் பார்த்தேன். பல உண்மைகளைப் பேசியமைக்காக அவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அதேசமயம், எனக்கு அணிக்குள் பலமுறை ஆதரவு தெரிவித்த வீரர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன். ஊடகம், நேர்மையான கிரிக்கெட் நிர்வாகிகள், பாகிஸ்தான் மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு கனேரியா தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x