

செஞ்சுரியன்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.
செஞ்சுரியன் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் பந்திலேயே டீன் எல்கர் (0) விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் பறிகொடுத்தது. மற்றொரு தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் 20 ரன்களில் சேம் கரண் பந்தில் நடையை கட்டினார்.
இவர்களை தொடர்ந்து ஜுபைர் ஹம்சா 39, ராஸி வான் டெர் டஸ்சென் 6, கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். 111 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் குயிண்டன் டி காக், டுவைன் பிரிட்டோரியஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. டுவைன் பிரிட்டோரியஸ் 33 ரன்கள் எடுத்த நிலையில் சேம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார்.
6-வது விக்கெட்டுக்கு குயிண் டன் டி காக்குடன் இணைந்து டுவைன் பிரிட்டோரியஸ் 87 ரன் கள் சேர்த்திருந்தார். சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப் பட்ட குயிண்டன் டி காக் 128 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்த நிலையில் சேம் கரண் பந்தில் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய கேசவ் மகாராஜ் 6, ரபாடா 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 82.4 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. பிலாண்டர் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் சேம் கரண் 4, ஸ்டூவர்ட் பிராடு 3 விக்கெட்கள் வீழ்த்தினர். கைவசம் ஒரு விக்கெட் இருக்க தென் ஆப்பிரிக்க அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.