Published : 26 Dec 2019 12:57 PM
Last Updated : 26 Dec 2019 12:57 PM

வெறும் 12 பார்வையாளர்கள் பார்த்த போட்டியில் ஒரே நாளில் 4 டி20 உலக சாதனைகள்: 2019 கிரிக்கெட்டின் அரிய நிகழ்வு

2019-ம் ஆண்டு கிரிக்கெட்டின் பெரிய அணிகளின் பெரிய சூப்பர் ஸ்டார்களின் சாதனைகள் எண்ணிக்கை பெரிதாகப் பேசப்பட்டு வரும் நிலையில் செக்.குடியரசு அணி கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி செய்த சாதனை இந்த ஆண்டுச் சாதனைகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.

ஆம்! ஆகஸ்ட் 30ம் தேதி அதிகம் அறியப்படாத ஐரோப்பிய கிராமம் ஒன்றில் அதிகம் அறியப்படாத ருமேனியா கோப்பை டி20 சர்வதேச போட்டியில் 4 டி20 சர்வதேச உலகசாதனைகள் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தகுந்த ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

ருமேனிய தலைநகர் புகாரெஸ்ட்டுக்கு வடகிழக்கே உள்ள மொவாரா விளாசீய் என்ற கிராமத்தில் நடந்த காண்டினெண்டல் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெறும் 12 பார்வையாளர்களே வந்திருந்த போட்டி ஒன்றில் முதலில் பேட் செய்த செக்.குடியரசு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்களைக் குவித்தது. இந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மென் விக்ரமசேகரா 35 பந்துகளில் சதம் விளாசி 36 பந்துகளில் 8 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 104 என்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

எதிரணியான துருக்கி அணி 21 ரன்களுக்குச் சுருண்டு 257 ரன்கள் வித்தியாசத்தில் செக்.குடியரசு அணி வென்றது, இவை அனைத்துமே டி20 உலக சாதனைகள்!!

செக்.குடியரசு அணி 20 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறது, ஆனால் இந்த சாதனை மேட்ச்தான் அவர்கள் கிரிக்கெட் அணியின் ஒரு மைல்கல் போட்டியாகும்.

ஐசிசி உறுப்புநாடுகளுக்கு இடையே நடைபெறும் அனைத்து டி20 போட்டிகளும் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டதையடுத்து இந்தச் சாதனை வெளிச்சத்துக்கு வந்தது.

2019-ல் நடந்த டி20 சர்வதேச போட்டிகளில் 75% டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகளுக்கு இடையே நடைபெற்றதுதான்.

37 வயதான சுரேஷ் விக்ரமசேகராவின் 35 பந்து சதம் டி20 சர்வதேச கிரிக்கெட்டின் இணைந்த அதிவேக சதமாகும். செக்.குடியரசு எடுத்த 278 ரன்கள் டி20 கிரிக்கெட்டின் இணைந்த அதிக ரன்களாகும். ஆப்கான் அணி அயர்லாந்துக்கு எதிராக 278 ரன்களை எடுத்துள்ளது.

துருக்கி அணி சுருண்ட 21 ரன்கள் டி20 கிரிக்கெட்டின் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையாகும். 8 துருக்கி பேட்ஸ்மென்கள் டக் அவுட் ஆனதும் ஒரு உலக சாதனையாகும்.

இவ்வளவு சாதனையையும் நிகழ்த்திய செக். குடியரசு அணி அந்தக் கான்ட்டினென்ட்டல் கோப்பையை வெல்ல முடியவில்லை. இறுதிப் போட்டியில் ஆஸ்திரியா அணியிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- ஆதாரம்: ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x