Last Updated : 12 Aug, 2015 09:50 AM

 

Published : 12 Aug 2015 09:50 AM
Last Updated : 12 Aug 2015 09:50 AM

இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: கோலிக்கு முதல் தொடர்; சங்ககாராவுக்கு கடைசி தொடர்

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொட ரின் முதல் போட்டி இலங்கையின் காலே நகரில் இன்று தொடங்கு கிறது.

1993-ம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை (1-0) கைப்பற்றியுள்ளது. அதன்பிறகு கடந்த 22 ஆண்டு களாக இலங்கை மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த முறை அந்த குறையைத் தீர்க்கும் முனைப்பில் களமிறங்குகிறது விராட் கோலி தலைமையிலான இளம் இந்திய அணி.

ஆனால் இலங்கை அணியோ, இந்தத் தொடரோடு விடைபெற வுள்ள முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான குமார் சங்ககாராவை வெற்றியோடு வழியனுப்ப வேண் டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

5 பவுலர்கள்

கோலி தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக விளையாடவுள்ள முழு டெஸ்ட் தொடர் இதுவாகும். இதற்கு முன்னர் வங்கதேசத்தில் விளையாடினாலும் அதில் ஒரு போட்டி மட்டுமே இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கங்குலிக்குப் பிறகு இந்திய அணியின் துடிப்புமிக்க கேப்டனாக பார்க்கப்படும் கோலி, எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என நம்புகிறார். அதனால் 5 பவுலர்களுடன் களமிறங்குவது என்ற புதிய உத்தியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் முரளி விஜய் காயம் காரணமாக இடம்பெறாததால் ஷிகர் தவனும், கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கவுள்ளனர். 3-வது பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மாவும், அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலியும் களமிறங்குவார்கள் என தெரிகிறது.

ஆஸ்திரேலியத் தொடரில் கோலி அசத்தினாலும், அதன்பிறகு பெரிய அளவில் ஜொலிக்க வில்லை. எனவே இந்த போட்டி யில் சிறப்பாக ஆடி இந்திய அணி யின் ரன் குவிப்புக்கு அடித்தளமிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மிடில் ஆர்டரைப் பொறுத்தவரை யில் கோலியை மட்டுமே நம்பியிருப்பது இந்திய அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

நம்பிக்கையளிக்கும் ரஹானே

5-வது பேட்ஸ்மேனாக அஜிங்க்ய ரஹானே நம்பிக்கையளிக்கிறார். இலங்கை வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதமடித்து அசத்திய அஜிங்க்ய ரஹானேவின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள் ளது. 6-வது பேட்ஸ்மேன் இடத்தை விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா நிரப்பவுள்ளார்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகி யோருடனும், சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆகி யோருடனும் இந்திய அணி களமிறங் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்ககாரா மீது எதிர்பார்ப்பு

இலங்கை அணியிலும் பெரும் பாலும் இளம் வீரர்களே இடம் பெற்றுள்ளனர். இலங்கை அணியின் தொடக்க வீரரான கவுஷல் சில்வா, நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடி வருவது அந்த அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் குமார் சங்ககாரா, எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர். கடைசி தொடரில் ஆடும் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ந்து தடுமாறி வரும் லஹிரு திரிமானிக்குப் பதிலாக உபுல் தரங்கா இடம்பெறுவார் என தெரிகிறது. கேப்டன் மேத்யூஸ், விக்கெட் கீப்பர் தினேஷ் சன்டிமால் ஆகியோரும் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர்.

3 சுழற்பந்து வீச்சாளர்கள்

இலங்கை அணி இரு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் தமிகா பிரசாத், நுவான் பிரதீப் ஆகியோரை நம்பியுள்ளது. சுழற்பந்து வீச்சில் தரின்டு கவுஷல், ரங்கனா ஹெராத், ஜெகன் முபாரக் ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை (2-1) இழந்த இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

விராட் கோலி உற்சாகம்

இலங்கை தொடர் குறித்துப் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, “நான் கேப்டனாக செயல்படவுள்ள முழு தொடர் இது என்பதால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறேன். இந்தப் போட்டியிலிருந்தே அணியின் வெற்றிப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என விரும்புகிறேன். என் மனதில் சில திட்டங்கள் உள்ளன. அதை செயல்படுத்துவதற்கான வாய்ப்பும், நேரமும் இப்போது வந்திருக்கிறது” என்றார்.

சாதிப்பாரா சங்ககாரா?

இந்த டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் இலங்கையின் தலைசிறந்த பேட்ஸ்மேனான குமார் சங்ககாரா. 2000-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சங்ககாரா, இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38 சதம், 52 அரை சதங்களுடன் 12,305 ரன்கள் குவித்துள்ளார். இதில் 11 இரட்டை சதங்களும் அடங்கும். காலே டெஸ்ட்டில் இரட்டை சதமடிக்கும்பட்சத்தில் டெஸ்ட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுடன் சமன் செய்வார்.

இதுவரை…

இவ்விரு அணிகளும் இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 14-லும், இலங்கை 6-லும் வெற்றி கண்டுள்ளன. 15 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

மைதானம் எப்படி?

காலேவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வப்போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வேகமாக உலரும் தன்மை கொண்ட காலே மைதானம் கடைசி இரு நாட்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளது.

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், முரளி விஜய், கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, விருத்திமான் சாஹா, அஸ்வின், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன்.

இலங்கை:

ஏஞ்செலோ மேத்யூஸ் (கேப்டன்), லஹிரு திரிமானி, கவுஷல் சில்வா, திமுத் கருணாரத்னே, குமார் சங்ககாரா, தினேஷ் சன்டிமால், உபுல் தரங்கா, ஜெகன் முபாரக், குசல் பெரேரா, ரங்கனா ஹெராத், தில்ருவான் பெரேரா, தரின்டு கவுஷல், நுவான் பிரதீப், தமிகா பிரசாத், விஷ்வா பெர்னாண்டோ, துஷ்மந்தா சமீரா.

துளிகள்

0 இந்தத் தொடரில் விளையாட வுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள டாப்-6 பேட்ஸ்மேன்களில் ஒருவர்கூட இதற்கு முன்னர் இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை.

1 இலங்கை மண்ணில் ஒரே யொரு முறை மட்டுமே (1993-ல்) இந்திய அணி டெஸ்ட் தொடரை (1-0) கைப்பற்றி யுள்ளது. அதன்பிறகு 1997-ல் (0-0) சமன் செய்துள்ளது. 2001, 2008-களில் 1-2 என்ற கணக் கில் தோல்வியை சந்தித்த இந்தியா, 2010-ல் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

4-3 காலேவில் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டி களில் 4 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பதிவு செய் துள்ளது இலங்கை. கடைசியாக இங்கு விளையாடிய போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றுள்ளது.

1-2 இந்திய அணி காலே மைதானத்தில் 3 போட்டி களில் விளையாடியுள்ளது. அதில் ஒரு வெற்றியையும், இரு தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

போட்டி நேரம்: காலை 10.00

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x