மறக்க முடியுமா இந்த நாளை? சேஸிங் நாயகனின் முதல் சதம்; 10 ஆண்டுகளில் 43 ஆக உயர்த்தியவர்

விராட் கோலி, சதம் அடித்த மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட காட்சி.
விராட் கோலி, சதம் அடித்த மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட காட்சி.
Updated on
3 min read

'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனியிடம் கேப்டன்ஷிப் படித்தவர் என்றாலும், ஆட்டத்தின் பரபரப்பான நிமிடங்களில் தனக்கே உரிய ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி சர்ச்சைகளை ஏற்படுத்துபவர்.

களத்தில் ஆவேசம், பேட்டிங்கில் அர்ப்பணிப்பு, பேட்டிங்கில் நங்கூரமிட்டுவிட்டால் அணிக்கு வெற்றியைத் தேடித் தராமல் நகராத சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன் என்று பெருமைக்குச் சொந்தக்காரர் விராட் கோலி.

கேப்டனைப் போல் செயல்படுவதில்லை, எதிரணி வீரர்களிடம் கோபம் கொள்கிறார், ஆக்ரோஷமாக இருக்கிறார் என்று பல விமர்சனங்கள் கோலி மீது வைக்கப்பட்டாலும், அவரின் பேட்டிங் ஸ்டைலுக்கு தனி ரசிகர்களே உண்டு. கோடிக்கணக்கான ரசிகர்கள் கோலியைப் பின்தொடர்கின்றனர்.

இந்திய அணியில் நடுவரிசை வீரராக வாழ்க்கையைத் தொடங்கி, இன்று உலகின் வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி வலம் வந்து கொண்டிருக்கிறார். நன்றாக பேட்டிங் செய்துவரும் வீரர்களிடம் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டபின் அவர்களின் பேட்டிங் திறமை மங்கும. கேப்டன்ஷிப் மீதான கவனத்தால் பேட்டிங்கில் கோட்டை விடுவதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், கேப்டன்ஷிப், பேட்டிங் ஆகிய இரண்டிலும் கோலி ஜொலித்து வருகிறார் என்பது வியப்புக்குரியது.

கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய முதல் சதம் குறித்து மறக்க முடியாத நினைவுகள், கனவுகள் இருக்கும். அதுபோலத்தான் விராட் கோலிக்கும் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அமைந்திருந்தது.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 2009-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இலங்கை அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில்தான் விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார்.

ஏறக்குறைய அடுத்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் வளர்ச்சி அசுரத்தனமானது. 43 சதங்கள், 55 அரை சதங்கள் உள்ளிட்ட 11 ஆயிரத்து 6,089 ரன்கள் சேர்த்து உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கோலி மாறியுள்ளார்.

இந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி தன்னுடைய பேட்டிங் திறமையை மிக நுணுக்கமாகப் பட்டை தீட்டி மெருகேற்றியுள்ளார். 43 சதங்களை எட்டிய கோலியின் முதல் சதம் அடித்த நினைவுகளைச் சற்று திரும்பிப் பார்க்கலாம்.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் இலங்கை தொடக்க ஆட்டக்காரர் உபுல் தாரங்கா சதம் அடித்து 106 ரன்களிலும், கேப்டன் சங்கக்கரா 60 ரன்களும் சேர்த்ததுதான் கவுரமான ஸ்கோராகும். மற்ற வீரர்களான ஜெயசூர்யா (15), ஜெயவர்த்தனா (33), பெரேரா (31) ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணியிலும் அந்தத் தொடரில் முக்கிய பேட்ஸ்மேன்கள் எம்.எஸ்.தோனியும், யுவராஜ் சிங்கும் இல்லாமல் சேவாக் தலைமையில் களமிறங்கியது. விக்கெட் கீப்பிங் பணியை தினேஷ் கார்த்திக் கவனித்தார்.

இலங்கை பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சேவாக் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை. ஜாகீர்கான், நெஹ்ரா, இசாந்த் சர்மா, ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா, ரெய்னா, சேவாக் பந்துவீசியும் சராசரியாக 5 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர்.

இதையடுத்து 316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சச்சின், சேவாக் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆனால், ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில் சச்சின் 8 ரன்னிலும், சேவாக் 10 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கிவிட்டது என்று ரசிகர்கள் நினைக்கத் தொடங்கினர். 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு கம்பீரும், விராட் கோலியும் இணைந்தனர். ஓரளவுக்கு அனுபவமான நிலையில்தான் கம்பீர் இருந்தார். ஆனால், விராட் கோலி அப்போதுதான் அணிக்குள் வந்து விளையாடி வந்ததால், இவர்கள் எவ்வாறு இக்கட்டைச் சமாளிப்பார்கள் என்று ரசிகர்கள் கையைப் பிசைந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில்தான் இருவரின் ஆட்டமும் அமைந்தது. இலங்கை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இருவரும் சதம் அடித்தார்கள். விராட் கோலி 110 பந்துகளில் ஒருநாள் போட்டியில் தனது முதலாவது ஒருநாள் போட்டி சதத்தை நிறைவு செய்தார். கவுதம் கம்பீர் 101 பந்துகளில் தனது 7-வது சதத்தை அடித்தார். இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 224 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 114 பந்துகளில் 107 ரன்களில் (ஒரு சிக்ஸர், 14 பவுண்டரி) ஆட்டமிழந்தார். கம்பீர் 150 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 19 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

48.1 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கம்பீர் தேர்வு செய்யப்பட்டார்.

கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையிலும், அணிக்காகவும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறார் கோலி. இவர் பெறாத உயரிய விருதுகளே இல்லை என்று கூறிவிடலாம். அந்த வகையில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்காக கடந்த 2013-ம் ஆண்டில் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

அத்துடன், நாட்டின் குடிமகன்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதை 2017-ம் ஆண்டு கோலிக்கு வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இருப்பினும், கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் சிறந்த வீரர் என்ற விருதைப் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் உயர்ந்த லட்சியங்களில் ஒன்றாக இருக்கும். அந்த லட்சியத்தையும் எட்டி விட்டார் விராட் கோலி.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் மதிப்புமிக்க விருதான சர் கார்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பையை விராட் கோலி முதல் முறையாக வென்றிருக்கிறார். 2017-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதுடன், சிறந்த ஒரு நாள் ஆட்டக்காரர் என்ற விருதுக்கும் ஐசிசி அமைப்பு அவரைத் தேர்வு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஐசிசியின் 2017-ம் ஆண்டுக்கான கவுரவ டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாகவும் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் அதிக ரன்கள் சேர்த்த வீரர் எனும் பெருமையையும் கோலி பெற்று வருகிறார். இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களில் 1,377 ரன்கள் சேர்த்து 2-வது இடத்தை கோலி பிடித்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் விராட் கோலி வியக்க வைக்கும் வீரர்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in