

சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்து நேற்றுடன் 15 வருடங்களை நிறைவு செய்தார் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி.
இந்த மைல் கல்லை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சற்று ஒதுங்கியுள்ள காலக்கட்டத்தில் எட்டியுள்ளார் தோனி. ராஞ்சியை சேர்ந்த தோனி கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தார்.
பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக உருவெடுத்த தோனி இதுவரை இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டி, 90 டெஸ்ட், 98 டி 20 ஆட்டங்களில் விளையாடி 17,266 ரன்கள் குவித்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 839 வீரர்களை வெளியேற்றியுள்ளார்.
கேப்டனாக இந்திய அணிக்கு 2007-ல் டி 20 உலகக் கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார். மேலும் டெஸ்டில் இந்திய அணியை நம்பர் ஒன் இடத்துக்கும் கொண்டு சென்றார். இதுதவிர ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 முறையும், சாம்பியன்ஸ் லீக்கில் 2 முறையும் கோப்பை வென்று கொடுத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.