

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கட்டாக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 316 ரன்கள் இலக்கை துரத்திய இந்த ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா 39 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பு செய்திருந்தார்.
இந்நிலையில் ஆட்டம் முடிவடைந்ததும் ஜடேஜா கூறியதாவது: குறுகிய வடிவிலான கிரிக்கெட்டிலும் திறமையை வெளிப்படுத்த முடியும் என எனக்கு நானே நிரூபிக்க வேண்டி இருந்தது. உலகில் யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு நானே நிரூபிக்க வேண்டும், அவ்வளவுதான்.
தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் ஆட்டமாக அமைந்ததால் இந்த இன்னிங்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த ஆண்டில் நான் அதிக அளவிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த நேரங்களில் பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சி செய்துள்ளேன்.
விராட் கோலியும் நானும் களத்தில் இருந்த போது ஆட்டம் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆடுகளமும் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது. துரத்தலை வெற்றிகரமாக முடித்து வைக்க விரும்புவதாக விராட் கோலி கூறினார். வெற்றிக்கு 21 பந்துகளில் 30 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் துரதிருஷ்டவசமாக விராட் கோலி ஆட்டமிழந்தார்.
அப்போது அவர் என்னிடம், இயல்பான ஷாட்களை விளையாடுங்கள், வேடிக்கையாக எதையும் செய்துவிடாதீர்கள், நேர்திசையை நோக்கி விளையாட முயற்சி செய்தால் போதும் என அறிவுரை வழங்கினார்.
நடுவரிசை பேட்டிங் சரிவை சந்திப்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சில நேரங்களில் நடைபெறும். நடுவரிசையில் விரைவாக 3 விக்கெட்களை நாங்கள் இழந்தோம். ஆனால் ஆடுகளம் பேட்டிங் செய்ய நன்றாக உள்ளது. கடைசி பந்து வரை விளையாடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். இவ்வாறு ரவீந்திர ஜடேஜா கூறினார்.