Published : 24 Dec 2019 09:35 AM
Last Updated : 24 Dec 2019 09:35 AM

உலகின் நம்பர் 1 அணிதான்... சமீபத்தில் இந்திய அணி பீல்டர்கள் விட்ட கேட்ச் எத்தனை தெரியுமா?

ரோஹித் சர்மா, விராட் கோலி பேட்டிங்கில் பிரமாதப்படுத்துகின்றனர், ராகுல் மெல்ல பார்முக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார், பவுலிங்கில் முகமது ஷமி 2019-ன் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக இருக்கிறார், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

இந்த ஆண்டு பிரமாதமான ஆண்டு என்கிறார் விராட் கோலி, இவையெல்லாம் சரி ஆனால் இந்திய அணி அந்தக்காலத்திலிருந்தே முன்னேறாத, தொழில் நேர்த்தியடையாத ஒரு துறை இருக்கிறது என்றால் அது பீல்டிங்தான்.

அனைத்து வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் சமீபமாக ஆடிய 6 போட்டிகளில் இந்திய அணி 21 கேட்ச்களை விட்டுள்ளது.

ஹைதராபாத்தில் ஒளிவிளக்குகள் தாழ்வாக இருப்பதால் கேட்சிங் கடினம் என்கிறார் கே.எல்.ராகுல், ஆனால் ஹைதராபாத் மட்டுமல்ல, திருவனந்தபுரம் டி20 போட்டியில் லெண்டில் சிம்மன்ஸ் 6 ரன்களில் கேட்ச் விடப்பட்டார், பிறகு 67 ரன்களை விளாசி வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

ரவீந்திர ஜடேஜாதான் இந்திய அணியின் ஒரே பீல்டர், அவருமே ஒரு கடினமான வாய்ப்பி 3வது போட்டியில் எவின் லூயிஸுக்கு விட்டார், ஆனால் உடனேயே அதற்கானவ் விலையைக் கொடுக்கும் முன்னரே எவின் லுயிஸ் கேட்சை எடுத்து ஈடுகட்டினார் ஜடேஜா.

ரிஷப் பந்த்தின் விக்கெட் கீப்பிங் படுமோசமாக உள்ளது, கேட்ச்களை விடுகிறார், ஸ்டம்பிங்கை விட்டுள்ளார், கட்டாக் ஒருநாள் போட்டியில் அபாய பேட்ஸ்மென் ஷிம்ரன் ஹெட்மையர் 9 ரன்களில் இருந்த போது எளதான கேட்சை ரிஷப் பந்த் ஜடேஜா பவுலிங்கில் கோட்டை விட்டார்.

அதே போல் ரிஷப் பந்த், ராஸ்டன் சேஸ் ரன் எண்ணிக்கையை தொடங்காத போது குல்தீப் யாதவ் பந்தில் கேட்சை விட்டார். 2வது ஒருநாள் போட்டியில் நிகோலஸ் பூரனுக்கு சாஹரும், ஷேய் ஹோப்புக்கு ராகுலும் கேட்சை விட்டனர்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியின் கேட்சிங் படுமோசமாக இருந்தது என்பதை விராட் கோலி உட்பட யாரும் மறுக்க முடியாது. மொத்தம் 21 கேட்ச்களை கடந்த 6 போட்டிகளில் இந்தியா விட்டுள்ளது என்கிறது கிரிக் இன்போ புள்ளி விவரம்.

மே.இ.தீவுகள், இலங்கை போன்ற அணிகளெல்லாம் பந்து வீச்சில் பலவீனமான அணிகள் அதனால் வலுவான இந்திய அணிக்கு எதிராக தொடரை இழக்கவே வாய்ப்புகள் அதிகம். அன்று சிம்மன்ஸ் மிகவும் சூசகமாக நுட்பமாக கூறியது என்னவெனில் ‘என்னதான் நாங்கள் சிறப்பாக விளையாடினாலும் கடைசியில் தோல்வி அடைவோம்’ என்று குறிப்பிட்டது சாதாரணமான கூற்றும் அல்ல மே.இ.தீவுகளின் பலவீனத்தைப் பற்றிய கூற்றும் அல்ல, அதையும் தாண்டிய உட்குறிப்புகள் கொண்டது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியெல்லாம் வெற்றி பெறுவதற்கென்றே வரும் அணி. கடந்த முறை இந்திய அணியை 3-2 என்று வெற்றி பெற்றுச் சென்றனர். வார்னருக்கோ, ஸ்மித்திற்கோ கேட்சை விட்டால் அவ்வளவுதான் என்று புரிய வைப்பார்கள்.

அதே போல் இந்திய அணியின் டாப் 3-யை காலி செய்து விட்டால் பிறகு இந்திய அணி ஒன்றுமில்லை என்று நமக்கே தெரியும் போது ஆஸ்திரேலியாவுக்குத் தெரியாதா? ஆகவே தென் ஆப்பிரிக்கா ஒருகாலத்தில் ஜாண்ட்டி ரோட்ஸின் பீல்டிங், கேட்சிங்கிலேயே சில பல ஒருநாள் போட்டிகளை வென்றுள்ளது, நாம் அப்படிப்பட்ட ஜீனியஸையெல்லாம் இந்த சிஸ்டத்திலிருந்து உருவாக்க முடியாது, ஆனால் கைக்கு வரும் கேட்சை பிடிக்கும் வீரர்கள் கூடவா இந்த சிஸ்டம் உருவாக்கவில்லை, ஆனால் சுயதம்பட்டம் பல மட்டங்களில் இருந்து வருவதை எப்படி புரிந்து கொள்வது என்பதுதான் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x