Last Updated : 22 Dec, 2019 04:29 PM

 

Published : 22 Dec 2019 04:29 PM
Last Updated : 22 Dec 2019 04:29 PM

கங்குலி, சச்சினைப் போல் சந்தித்திருப்பார்களா? கோலி, ரோஹித் சிறந்த பேட்ஸ்மேன்களா? சீண்டிய இயான் சேப்பல்

கங்குலி, சச்சின் : கோப்புப்படம்

புதுடெல்லி

விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் பேட்டிங்கில் ரன்களை வாரிக் குவிக்கலாம். சச்சின், கங்குலி சந்தித்த அளவுக்கு உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சை அவர்கள் சந்தித்து இருப்பார்களா என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான இயான் சேப்பல் இணையதளம் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் ரோஹித் சர்மா, கோலி இருவரையும் சீண்டியுள்ளார்.

அக்கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும்தான் இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என்ற வாதம் எழுந்துள்ளது.

உண்மையில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி கூட்டணி 15 ஆண்டுகளாக சர்வதேச பந்துவீச்சாளர்களைக் கிழித்து எறிந்ததைப் போல், அவர்கள் சந்தித்த தரமான சவாலான பந்துவீச்சைப் போல் ரோஹித் சர்மா, விராட் கோலி சந்தித்திருப்பார்களா?

சச்சின், கங்குலி ஜோடி கிரிக்கெட்டில் கோலோச்சிய காலத்தில், ஒவ்வொரு சர்வதேச அணியிலும் இரு தரமான, மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

கங்குலியும், சச்சினும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கும்போது, உலகின் தரமான இரு வேகப்பந்துவீச்சாளர்களின் சவாலான பந்துவீச்சை எதிர்கொண்டார்கள்.

பாகிஸ்தானில் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கர்ட்லி ஆம்புரோஸ், கோர்ட்னி வால்ஷ், ஆஸ்திரேலியாவில் மெக்ராத் பிரட் லீ, தென் ஆப்பிரிக்காவில் ஷான் போலக், ஆலன் டோனல்ட், இலங்கை அணியில் சாமிந்தா வாஸ், லசித் மலிங்கா ஆகியோரின் பந்துவீச்சு பேட்ஸ்மேன்களின் திறமைக்குச் சோதனை.

"ஒருவரின் எதிராளியை வைத்தே அவரை மதிப்பிடலாம்" என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் அடிக்கடி ஒரு வார்த்தையைக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். அந்த அடிப்படையில் தரமான எதிரணி பந்துவீச்சாளர்களை கங்குலியும், சச்சினும் எதிர்கொண்டபோதே அவர்கள் யார் என்பதை மதிப்பிடலாம்.

சச்சின் விளையாடிய இன்னிங்ஸ் அளவுக்கு கோலிக்கு அதே இன்னிங்ஸை வழங்கி, கங்குலி விளையாடிய அளவுக்கு ரோஹித் சர்மாவுக்கு அதே இன்னிங்ஸை வழங்கி புள்ளிவிவரங்களை ஒப்பிட்டால் ரன் அடிப்படையில் கோலி, ரோஹித் முதலிடத்தில் இருப்பார்கள். கோலியும், ரோஹித் சர்மாவும் விவாதத்துக்கு இடமின்றி ஒருநாள் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்கள்தான்.

கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் சேர்ந்து ஒருநாள் போட்டி, டி20 போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். கோலி டி20, ஒருநாள் போட்டியில் நம்பமுடியாத அளவுக்குச் சராசரி வைத்துள்ளார். ஆனால், நேர்மையாகப் பரிசீலித்தால், சச்சின் மிகக்குறைந்த அளவுதான் டி20 போட்டியில் விளையாடினார். டி20 போட்டிகள் வரும் முன்பே கங்குலி தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல், ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அதைக் காட்டிலும் ரோஹித் சர்மா 3 இரட்டைச் சதம் அடித்திருக்கலாம், இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் சேர்த்த ரோஹித்தின் ஆட்டம் ஈடன் கார்டன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

கிரிக்கெட்டின் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின், ஒருபோதும் பவுன்ஸர் ஆடுகளத்தில் தனக்குரிய பேக்-ஃபுட் ஷாட்டை ஆடாமல் அவர் பின்வாங்கியதில்லை. அதுபோல, கங்குலியைப் போன்று ஆஃப்சைடில் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்களைப் பார்க்க முடியாது. கங்குலியின் ஆஃப் சைட் ஷாட்களைப் பார்ப்பதற்கே ரசிகர்கள் குவிவார்கள்.

விராட் கோலியின் முத்திரை என்பது, அதிகமான ஸ்கோரும், தொடர்ச்சியான வெற்றிகளும்தான். பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளை அனைத்துத் திசைகளிலும் அடித்துப் பறக்கவிட்டு, கோலி தண்டனை அளிப்பார். பேட்டிங்கை ஒரு பெரிய சுமையாகக் கருதாமல் விளையாடக் கூடிய கோலி, நல்ல ரன் ரேட் வைத்துள்ளார்.

அதேசமயம் ரோஹித் சர்மா அதிகமான முயற்சிகள் எடுக்காமல் விளையாடி அதன்பின் சாதித்தவர். கெயில் போன்று வலிமையான ஷாட்களை ஆடாவிட்டாலும், அவருக்கு இணையாக சிக்ஸர்களை அடித்து, உயர்ந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார்''.

இவ்வாறு சேப்பல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x