Last Updated : 22 Dec, 2019 11:20 AM

 

Published : 22 Dec 2019 11:20 AM
Last Updated : 22 Dec 2019 11:20 AM

'கட்டாக்'கில் கோலியின் 'அட்டாக்' இருக்குமா? ராசியில்லாத மைதானத்தில் காத்திருக்கு மைல்கல்

விராட் கோலி : கோப்புப்படம்

கட்டாக்

கட்டாக் நகரில் இன்று நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால், கடந்த காலங்களில் கட்டாக்கில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடந்த 2 போட்டிகளிலும் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் 4 ரன்னிலும், அடுத்து விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் அரிதினும் அரிதாக 'கோல்டன் டக்அவுட்டில்' கோலி ஆட்டமிழந்தார். கோலி கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் டக்அவுட்டில் ஆட்டமிழப்பது அதுதான் முதல் முறை. மேலும், கிரிக்கெட் வாழ்க்கையில் கோலியின் 13-வது 'டக்அவுட்' மட்டுமே.

ஆதலால், கட்டாக்கில் நடக்கும் இந்தப் போட்டியில் கோலியின் பேட்டிங் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு எதிர்பார்க்கப்பட்டாலும், பாரபட்டியில் உள்ள இந்த மைதானத்தில் கோலியின் கடந்த கால பேட்டிங்கைப் பார்த்தால்தான் பயமாக இருக்கிறது.

ஏனென்றால், இதுவரை 4 முறை இந்த மைதானத்தில் விளையாடியுள்ள கோலி மொத்தமே 34 ரன்கள்தான் குவித்துள்ளார். அதாவது 3, 22, 1, 8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆதலால்தான் இந்த ஆட்டத்தில் கோலி ஜொலிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது

அதுமட்டுமல்லாமல் கோலி ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 56 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அவ்வாறு 56 ரன்களை எட்டிவிட்டால், ஒருநாள் ஆட்டத்தில் அதிகமான ரன்கள் சேர்த்த 7-வது வீரர் எனும் பெருமையையும், ஜேக்ஸ் காலிஸை முறியடித்த பெருமையும் கோலிக்குச் சேரும்.

கோலி 241 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,524 ரன்களுடன் 69.70 சராசரி வைத்துள்ளார். தென் ஆப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேக் காலிஸ் 328 போட்டிகளில் 11,579 ரன்கள் சேர்த்து சராசரியாக 44.36 வைத்துள்ளார். காலிஸின் சாதனையை முறியடிக்க கோலிக்கு 56 ரன்கள்தான் தேவைப்படுகிறது.

ஒருநாள் போட்டியில் அதிகமான ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 'லிட்டில் மாஸ்டர்' சச்சின் 18,426 ரன்களுடன் முதலிடத்திலும், அடுத்த இடத்தில் சங்ககரா 14,234 ரன்களுடனும், 3-வதுஇடத்தில் ரிக்கி பாண்டிங் 13,704 ரன்களுடன் உள்ளனர்.

மேலும், கேப்டனாகப் பொறுப்பேற்று அனைத்துத் தரப்பிலான போட்டிகளிலும் 11 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு கோலிக்கு இன்னும் 116 ரன்கள் தேவைப்படுகிறது. அவ்வாறு எட்டினால் கேப்டனாக 11 ஆயிரம் ரன்களை எட்டிய 6-வது வீரர் எனும் பெருமையைக் கோலி பெறுவார். கோலி தற்போது 165 போட்டிகளில் 10,884 ரன்களுடன் உள்ளார்.

இந்த வரிசையில் முதலிடத்தில் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 320 போட்டிகளில் 15,440 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸி முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் 11ஆயிரத்து 62 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சாதனையைக் கோலி முறியடிக்க 178 ரன்கள் தேவைப்படுகிறது.

ஆனால், கேப்டனாகப் பொறுப்பேற்று அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து 11 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் 'தல' தோனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x