Published : 22 Dec 2019 08:49 AM
Last Updated : 22 Dec 2019 08:49 AM

கட்டாக்கில் இன்று கடைசி ஆட்டம்: ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி அதன் பின்னர் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டெழுந்தது.

இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. இந்நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி ஆட்டம் கட்டாக்கில் உள்ள பாராபட்டிமைதானத்தில் இன்று நடைபெறுகிறது. விசாகப்பட்டினத்தில் கிடைத்த உத்வேகத்தை இன்றையஆட்டத்துக்கும் வியாபிக்க செய்வதில் விராட் கோலி குழுவினர் முனைப்பு காட்டக்கூடும்.

2-வது ஆட்டத்தில் சதம் விளாசிய ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் இறுதி கட்டத்தில் மட்டையை சுழற்றிய ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இன்றைய ஆட்டம் முக்கியமானது என்பதால் விராட் கோலியும் சிறந்த பங்களிப்பு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

பந்து வீச்சில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய குல்தீப் யாதவ் மீண்டும் ஒரு முறை மேற்கிந்தியத் தீவுகளின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளார்.காயம் அடைந்துள்ள தீபக் சாஹருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள நவ்தீவ் சைனி இன்றைய ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியானது பேட்டிங்கில் ஷிம்ரன் ஹெட்மையர், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் ஆகியோரையே பெரிதும்நம்பி உள்ளது. பந்து வீச்சில்ஷெல்டன் காட்ரெல், கீமோ பால்,கெஸ்ரிக் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்த முடியும்.

பாராபட்டி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டமும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையக்கூடும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கடைசியாக மோதிய 9 இருதரப்பு ஒருநாள் போட்டி தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இம்முறை 10-வது முறையாக தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதேவேளையில் 2006-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றும் முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தீவிரம் காட்டக்கூடும்.

நேரம்: பிற்பகல் 1.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் கோலி

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், கொல்கத்தாவில்உள்ள காப்பகம் ஒன்றில் குழந்தைகளிடம் தங்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக யாரை சந்திக்க வேண்டும், என்ன பரிசு வேண்டும் என கேட்கப்படுகிறது. அதற்கு அவர்கள் தங்களுக்கு வேண்டிய பரிசுகளையும் அதனை ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் ஆகியோரிடம் இருந்து பெற வேண்டும் என கூறுகின்றனர்.

அதன் பின்னர் தாடி வைத்துள்ள கிரிக்கெட் வீரரான விராட் கோலியை பிடிக்கும் என தங்களது பாணியில் கூறுகின்றனர். இதை கையடக்க கணினியில் பார்க்கும் விராட் கோலி அதன் பின்னர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தபடி குழந்தைகள் கேட்ட பல்வேறு பரிசு பொருட்களுடன் காப்பகத்துக்கு செல்கிறார். அங்குள்ள காப்பக உரிமையாளர் சூப்பர் மேனும், ஸ்பைடர் மேனும் விடுமுறையில் சென்றுள்ளனர் விராட் கோலியை சந்திக்க விரும்புகிறீர்களாக என கேட்கிறார்.

இதற்கு குழந்தைகள் ஆமாம் என தலையாட்டியதும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் இருக்கும் விராட் கோலி தலை முடி, தாடி, மீசையை கழற்ற குழந்தைகள் உற்சாகம் அடைகின்றனர். பின்னர் குழந்தைகள் கேட்ட பரிசுகளை அவர்களுக்கு விராட் கோலி வழங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. விராட் கோலியின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x