

கராச்சியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்குச் சுருண்டு சொதப்பிய பாகிஸ்தான் அணி 3ம் நாளான இன்று தன் 2வது இன்னிங்சில் வலுவான நிலையில் 355/2 என்று உள்ளது.
இலங்கை அணி தன் முதல் இன்னிங்சில் 271 ரன்கள் என்று 80 ரன்கள் முன்னிலை வகித்தது, தற்போது பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர்களான் ஷான் மசூத், அபிட் அலி இணைந்து முதல் விக்கெட்டுக்காக சுமார் 68 ஓவர்களில் 278 ரன்களை எடுத்தனர். இருவருமே சதம் எடுத்தனர். ஷான் மசூத் 135 ரன்களை எடுக்க அபிட் அலி சற்று முன் 174 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் சாதனைப்புத்தகத்தை அவர்கள் மாற்றி அமைத்துள்ளனர்.
278 ரன்கள் ஷான் மசூத், அபித் அலி முதல் விக்கெட் கூட்டணி அமைத்தது பாகிஸ்தான் டெஸ்ட் வரலாற்றில் 2வது மிகப்பெரிய முதல் விக்கெட் கூட்டணி ரன்களாகும். இதற்கு முன் அமீர் சொஹைல், இஜாஜ் அகமெட் சேர்ந்து கராச்சியில் 1997-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்ததே பாக், தொடக்க சாதனையாக இருந்தது. பாகிஸ்தானின் முதல் 3 டாப் முதல் விக்கெட் கூட்டணிகளுமே கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் அமைந்ததுதான்.
டெஸ்ட்டின் 3வது இன்னிங்ஸில் இருமுறையே அதிகபட்ச தொடக்கக் கூட்டணி ரன்கள் எடுக்கப்பட்டன, இதில் 2015ம் ஆண்டு குல்னாவில் நடந்த டெஸ்ட்டில் வங்கதேசத்தின் தமிம் இக்பால், இம்ருல் கயேஸ் இணைந்து பாகிஸ்தானை காயவிட்டு 312 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
இதுவரை இலங்கைக்கு எதிராக மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர் 2004இல் எடுத்த 255 ரன்களே முதல் விக்கெட்டுக்கான சிறந்த ரன் எண்ணிக்கையாக இருந்தது தற்போது இலங்கைக்கு எதிராக ஷான் மசூத், அபிட் அலி அவர்களை முறியடித்து 278 ரன்கள் சேர்த்துள்ளனர்.
பாகிஸ்தான் வீரர்கள் இருவர் ஒரே இன்னிங்ஸில் சதம் எடுப்பது இது 3ம் முறையாகும்.
டெஸ்ட் கரியரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் எடுத்த 9 வீரர்கள் பட்டியலில் அபிட் அலி இணைந்துள்ளார்.