

கர்நாடாவில் நடந்த 14 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டின் மூத்த மகன் சமித் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
துணைத் தலைவர் லெவன் அணியின் கேப்டனாக இருக்கும் சமித் தார்வாட் மண்டலுக்கு எதிரான ஆட்டத்தில் 250 பந்துகளில் 201 ரன்கள் குவித்துள்ளார். இதில் 22 பவுண்டரிகள் அடங்கும்.
ஆல்ரவுண்டரான சமித், 2-வது இன்னிங்ஸில் 94 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இருப்பினும் தார்வாட் அணிக்கு எதிரான துணைத்தலைவர் லெவன் அணி மோதிய போட்டி டிராவில் முடிந்தது.
சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமாக இருந்த சமித்துக்கு தொடக்கத்தில் திராவிட் பயிற்சி அளித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குப் பெங்களூருவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சமித் தான் சார்ந்த மால்யா அதிதி சர்வதேச பள்ளியின் சார்பில் பங்கேற்று 3 அரைசதங்கள் அடித்தார். இந்த 3 சதங்களுமே வெற்றியாக அமைந்தன.
2018-ம் ஆண்டு கர்நாடக கிரிக்கெட் அமைப்பு சார்பில் நடந்த பிடிஆர் 14 வயதுக்குட் பட்டோருக்கான கோப்பை கிரிக்கெட் போட்டியில் சமித் சதம் அடித்து அசத்தினார்.
பிடிஆர் கோப்பைப் போட்டியில் விவேகானந்தா பள்ளியை 412 ரன்கள் வித்தியாசத்தில் மால்யா அதிதி பள்ளி வென்றது. மால்யா பள்ளி சார்பில் களமிறங்கிய திராவிட்டின் மகன் சமித் 150 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தூண் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் திராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 13,288 ரன்கள் குவித்துள்ளார். தற்போது கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் திராவிட் உள்ளார்.