

ஐபிஎல் ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு வாங்கியது ஏன்? என்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பியூஸ் சாவ்லா (ரூ.6.75 கோடி), சேம் கரண் (ரூ.5.50 கோடி), ஜோஸ் ஹசல்வுட் (ரூ.2 கோடி), சாய் கிஷோர் (ரூ.20 லட்சம்) ஆகிய 4 பந்து வீச்சாளர்களை மட்டும் ஏலம் எடுத்தது. சிஎஸ்கே அணியிடம் கையிருப்பு தொகை ரூ.14.60 கோடி மட்டுமே இருந்ததால் அதை கணக்கில் கொண்டு இந்த 4 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடிந்தது.
இது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “எங்களிடம் அதிக தொகை இல்லாததால் மற்ற அணிகளின் தேவையை அறிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டி இருந்தது. எங்கள் அணிக்கு பொருந்தக்கூடிய பெரிய அளவிலான வீரர்களுக்காகவும் காத்திருந்தோம்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான சேம் கரண் கட்டர்களை வீசுவதிலும் பேட்டிங்கிலும் கைகொடுக்கக் கூடியவர். அவரை அணியில் சேர்த்ததை சிறப்பான அம்சமாகவே கருதுகிறோம். பியூஸ் சாவ்லா உலகத் தரம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர். நாங்கள் எப்போதும் சுழற் பந்து வீச்சாளர்களை விரும்பக்கூடியவர்கள்.
எங்களிடம் பல்வேறு வகையான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பது குறித்து தற்போது முடிவு செய்ய வேண்டி உள்ளது. நாங்கள் பியூஸ் சாவ்லாவை விரும்பினோம். பேட்டிங்கில் அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் உயர்வாக மதிப்பிடுகிறோம். எனவே சாவ்லாவை அணியில் சேர்ப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போது அதற்கான அணி சேர்க்கையை எளிதில் பெற்றுவிடுவோம். ஆனால் வெளி மைதானங்களில் விளையாடும் போது அணியின் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய விரும்புகிறோம். சேம் கரண், டுவைன் பிராவோ ஆகியோர் இருப்பதால் நடுவரிசை பலம் பெறும். நாங்கள் சவுகரியமாக உள்ளோம்” என்றார்.