

சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகள் இடையிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் 8-ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் ஆடவர் பிரிவில் 26 அணிகளும், மகளிர் பிரிவில் 18 அணிகளும் பங்கேற்கின்றன. ஏறக்குறைய 750 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள்.
நாக் அவுட் முறையிலான இந்தப் போட்டி பகலிலும், மின்னொளியிலும் நடத்தப்படுகிறது. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளுக்கான இறுதி ஆட்டங்களும் வரும் 8-ம் தேதி மாலையில் நடைபெறவுள்ளன.
திறமையான இளம் வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டியில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் சினோரா அசோக், செயலாளர் நிஸ்ஸார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.