

சென்னையில் நடைபெற்ற ஆஸி.-இந்திய ஏ அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது ஆஸி.கேப்டன் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியா முத்தரப்பு தொடரை வென்றது, ஆனால் மைதானத்தில் நடந்த சம்பவம் ஒன்று ஆஸி.வீரர்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் போது சஞ்சு சாம்சன் கேட்ச் ஒன்றைப் பிடித்தார். அது முறையான கேட்ச் அல்ல என்று ஆஸ்திரேய வீரர்கள் கருதினர். இதனையடுத்து சூடான வாக்குவாதம் இருதரப்பினரைடையேயும் ஏற்பட்டது. அது அதோடு முடியாமல் சஞ்சு சாம்சன் பேட்டிங் ஆடவந்தபோதும் தொடர்ந்துள்ளது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஏதோ வார்த்தை வசையை பயன்படுத்த இவர் பதிலுக்கு துப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து கவாஜா கூறும்போது, “இதனால் எங்கள் அணி வீரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதாவது கேட்சை பிடித்ததாக அவர் சாதித்தார். அதன் பிறகு எங்கள் வீரர்களின் காலடியில் 3 முறை துப்பினார். நடுவர்களுக்கு அவரது செயல் புரியவில்லை. நாங்கள் வீரர்களை அமைதிப் படுத்த முயன்றோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
எங்கள் வீரர் ஏதாவது பேசியிருந்தால் பதிலுக்கு அவரும் பேசியிருந்தால் பிரச்சினையல்ல. ஆனால் எச்சில் துப்புவது என்பது ஒரு போதும் ஏற்க முடியாதது. அவர் களமிறங்கிய போது எங்கள் வீரர் ஒருவரை நோக்கி துப்பினார். அதாவது எங்கள் வீரர் ஏதோ ஒன்று அவரை நோக்கிக் கூறினார்.
நானும் புரிந்து கொள்கிறேன், வார்த்தைக்கு வார்த்தைதான் பதிலே தவிர துப்புதல் அல்ல.
நான் இதனை பெரிது படுத்த விரும்பவில்லை. இதற்காக இந்தியா இன்று பெற்ற வெற்றியை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. சிறப்பாக விளையாடிய அணி வென்றது” என்றார் கவாஜா.
சஞ்சு சாம்சனும், குர்கீரத் சிங்கும் இணைந்து 6 விக்கெட்டுகளுக்கு மேல் விழாமல் வெற்றி பெறச் செய்தனர், சாம்சன் 24 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
ஆட்ட நாயகன் குர்கீரத் சிங்கிடம் இந்த சம்பவம் பற்றி கேட்ட போது,
”எனக்கு உண்மையில் என்ன நடந்ததென்றே தெரியவில்லை. அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர், நான் எதையும் கேட்கவில்லை. அது அவர்கள் பாணி விளையாட்டு, எங்கள் பாணி வித்தியாசமானது. யாராவது ஏதாவது கூறினால் நாம் கவனத்தை சிதற விடக்கூடாது” என்றார்.