

பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் வாழ்ந்து, பானிபூரி விற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற வீரரை ரூ.2.40 கோடிக்கு விலைக்கு வாங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாழ்வு கொடுத்துள்ளது.
17 வயதாகும் யாஷ்வி ஜெய்ஸ்வாலைத் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பதோகி அருகே சூர்யா நகரைச் சேர்ந்தவர் யாஷ்வி ஜெய்ஸ்வால். இவரின் தந்தை சிறிய கடை நடத்தி வருகிறார். தன்னுடைய 11-வயதில் மும்பைக்குப் பிழைப்புத் தேடியும், கிரிக்கெட்டில் லட்சிய வீரராக மாற வேண்டும் என்ற நோக்கில் ஜெய்ஸ்வால் வந்துள்ளார்.
ஆனால், அவருடைய ஏழ்மை காரணமாக மும்பையில் உள்ள முஸ்லிம் யுனைடெட் மைதானம் அருகே பிளாஸ்டி தார்ப்பாயில் ஒரு குடிசை அமைத்து ஜெய்ஷ்வால் தங்கியுள்ளார். பானிபூரி தயாரிக்கும் ஒருகடையில் வேலைபார்த்த நேர் போக மீத நேரத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
ஜெய்ஸ்வால் பேட்டிங், பந்துவீச்சு திறமையைப் பார்த்த பயிற்சியாளர் அவருக்குப் பயிற்சி அளித்துள்ளார். அதன்பின் மும்பையில் கடந்த 2015-ம் ஆண்டு கில்ஸ் ஷீல்ட் கிரிககெட் போட்டியில் விளையாட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் 319 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார்.
அதன்பின், செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் (லிஸ்ட் ஏ) ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 203 ரன்கள் சேர்த்து அனைவரின் கவனத்தையும் ஜெய்ஸ்வால் ஈர்த்துள்ளார்.
இதையடுத்து 19 வயதுக்குப்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து ஜெய்ஸ்வால் கூறுகையில், " ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்னைத் தேர்வு செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு இது சிறந்த வாய்ப்பு. என் கிரிக்கெட் வாழ்க்கையைச் சிறப்பாக இது எனக்குக் கிடைத்த சிறந்த அடித்தளமாகப் பார்க்கிறேன்.
நான் சிறுவயதில் பானிபூரி விற்றுக் கொண்டே வீரர்கள் என்னைப் பலரும் கிண்டல் செய்வார்கள். ஆனால், அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எப்போது பணம் கிடைக்கிறதோ, சாதகமான நேரம் கிடைக்கிறதோ அப்போது சாப்பிடுவேன். மிகுந்த கஷ்டத்தோடு வாழ்ந்துவந்த எனக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.