Published : 19 Dec 2019 05:41 PM
Last Updated : 19 Dec 2019 05:41 PM

சல்யூட் காட்ரெல் ரூ.8.5 கோடிக்கு ஏலம்; மீண்டும் ராஜஸ்தான் அணியில் உனத்கத்: இந்திய வீரரை அதிக விலைக்கு எடுத்த சிஎஸ்கே

கொல்கத்தாவில் நடந்துவரும் 2020 சீசன் ஐபில் போட்டிக்கான ஏலத்தில் மே.இ.தீவுகள் அணி வீரர் ஷெல்டன் காட்ரெலை ரூ8.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் உனத்கத்தை ராஜஸ்தான் அணி ஏலத்தில் வாங்கியது.

மேற்கிந்தியத்தீவுகள் வீரர் ஷெல்டன் காட்ரெல் முதல் முறையாக ஐபிஎல் போட்டி ஏலத்துக்குள் வந்ததால் அவருக்கு அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஏலம் தொடங்கியதும் காட்ரெலை ரூ.1.7 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேட்டது. ஆனால், ஆர்சிபிஅணியும், கிங்ஸ்லெவன் அணியும் சேர்ந்து காட்ரலை ரூ.2.2 கோடிக்கு உயர்த்தின.

இதில் டெல்லி அணியும் சேர்ந்து கொண்டு காட்ரெலுக்கு ஏலத் தொகையை ரூ.3.80 கோடிக்கு உயர்த்தியது. ஆனால், காட்ரெலை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த கிங்ஸ்லெவன் அணி ரூ.4.2 கோடிக்கு ஏலம்கேட்டது. ஆனால், டெல்லி அணி ரூ.5 கோடி கொடுத்து காட்ரெலை எடுக்க தயாராக இருந்தது. இறுதியாக ரூ.8.5 கோடிக்கு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி காட்ரெலை விலைக்கு வாங்கியது.

ஆஸ்திரேலிய வீரர் நாதன் கோல்டர் நீல் அடிப்படை விலையாக ரூ.ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன் கேகேஆர், ஆர்சிபி, டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியில் கோல்டர் நீல் விளையாடி இருந்தார்.

ஏலம் தொடங்கியதும் கோல்டர் நீல் விலைக்கு வாங்க சிஎஸ்கே அணியும், மும்பை அணியும் போட்டி போட்டன. மும்பை அணி ரூ.2 கோடிக்கு கோல்டர் நீலை விலைக்கு வாங்க முற்பட்டது, ஆனால், சிஎஸ்கே அணி ரூ.4 கோடிக்கு கோல்டர் நீலை விலைக்கு கேட்டது. மும்பை அணி ரூ.5.25 கோடி விலை வைக்க, சிஎஸ்கே ரூ.6 கோடிக்கு கோல்டர் நீலை விலைக்கு கேட்டது.
இறுதியாக மும்பை அணி ரூ.7.75 கோடிக்கு கோல்டர் நீலை விலைக்கு வாங்கியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரும் இடதுகை வேகப்பந்துவீச்சாளருமான ஜெயதேவ் உனத்கத்துக்கு அடிப்படை விலையாக ரூ.ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஏலத்தில் உனத்கத் அறிவிக்கப்பட்டதும், அவரை ரூ.3 கோடிக்கு மீண்டும் ராஜஸ்தான் அணியே விலைக்கு வாங்கியது.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் 5 ஆண்டுகள் இருந்த சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா, அதன்பின் கொல்கத்தா அணியில் இருந்துவந்தார். கடந்த ஆண்டு சீசன் முடிந்ததும், கொல்கத்தா அணி பியூஷ் சாவ்லாவை விடுவித்தது.

ஏலத்துக்கு பியூஷ் சாவ்லா பெயர் அறிவிக்கப்பட்டதும் அடிப்படை விலையாக ரூ.ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்டது. அவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் அணி ரூ.1.5 கோடிக்கு கேட்டது. ஆனால், அதிரடியாக நுழைந்த சிஎஸ்கே அணி ரூ.6.5கோடிக்கு பியூஷ் சாவ்லாவை விலைக்கு வாங்கியது. இந்திய வீரர்களில் அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் பியூஷ் சாவ்லா என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x