

கொல்கத்தாவில் நடந்துவரும் 2020 சீசன் ஐபில் போட்டிக்கான ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸை ஆர்சிபி அணியும், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் சாம் கரணை சிஎஸ்கேஅணியும் விலைக்கு வாங்கின.
தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸுக்கு அடிப்படை விலை ரூ.1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன் சிஎஸ்கே அணியிலும், டெல்லி அணியிலும் மோரிஸ் விளையாடி இருந்தார்.
கிறிஸ் மோரிஸை ஏலத்தில் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.2 கோடிக்கு மோரிஸை ஏலம் கேட்டது. ஆனால், ஆர்சிபி அணி ரூ.3 கோடி விலை வைத்தது.
ஆல்ரவுண்டர்களுக்கு எப்போதும் ஒருவிதமான கிராக்கி இருக்கும் என்பதால் ஆர்சிபி அணியும், கிங்ஸ்லெவன் கடுமையாக போட்டியிட்டன. இறுதியாக பெங்களூரு அணி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் மோரிஸை விலைக்கு வாங்கியது.
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் சாம் கரன் அடிப்படை விலை ரூ.ஒருகோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. சாம் கரன் ஏலத்துக்கு வந்ததும் அவரை டெல்லி அணி விலைக்கு வாங்க துடித்தது. ஆனால், சிஎஸ்கே அணி ரூ.1.10கோடிக்கு சாம் கரனை விலைக்கு கேட்டது. இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், சிஎஸ்கே அணிக்கும் ஏலத்தில் போட்டி ஏற்பட்டது.
சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ரூ.1.7 கோடிக்கும், அதன்பின் டெல்லி அணி ரூ.2 கோடி கேட்க, சிஎஸ்கே அணி ரூ.4 கோடியாக சாம் கரனுக்கு விலை வைத்தது.
சிஎஸ்கே அணியில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால், சாம் கரனை நழுவவிட சிஎஸ்கே அணி தயாராக இல்லை. இதனால், ரூ.5.5 கோடிக்கு சாம் கரனை விலைக்கு வாங்கியது.