

2020 சீசன் ஐபில் போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லினை மும்பை அணியும், இங்கிலாந்துவீரர் மோர்கனை கொல்கத்தா அணியும் விலைக்கு வாங்கியது.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கடந்த 6 சீசன்களில் விளையாடிய கிறிஸ் லினை அந்த அணி கழற்றிவிட்டது. இவருக்கு அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ஏலம் தொடங்கியவுடன் அவரை மும்பை அணி அதே விலைக்கு ரூ.2 கோடிக்கு வாங்கியது.
கடந்த 2017-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பாதியிலேயே தோள்பட்டை காரணமாக கிறிஸ் லின் விலகினார். ஆனால், கடந்த 6 சீசன்களிலும் கொல்கத்தா அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தவர் கிறிஸ் லின் என்பதை மறக்க முடியாது. கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் தோள்பட்டை எலும்பு முறிவு காரணமாக நீண்டகாலமாக விளையாடாமல் இருந்து இப்போது விளையாடி வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிறிஸ் லின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக அமைவார். கடந்த 3 சீசன்களிலும் கிறிஸ் லின் சராசரியாக 397 ரன்கள் வைத்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 150 வைத்துள்ளார். பிபிஎல் லீக் வரலாற்றில் 123 சிக்ஸர் அடித்து கிறிஸ் லின் சாதனை புரிந்துள்ளார்
இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்த எயின் மோர்கனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது. மோர்கனின் அடிப்படை விலை ரூ.1.5 கோடியாகும். ஆனால், ஏலம் அறிவித்தவுடன் டெல்லி அணி மோர்கனை வாங்க நினைத்தது. கொல்கத்தா அணியும் போட்டியிட்டு ரூ.2.4 கோடிக்கு விலை வைத்தது. அனைத்தையும் மீறி டெல்லி அணி ரூ.4 கோடிக்கு மோர்கனுக்கு விலை வைத்தது. ஆனால், இறுதியாக ரூ.5.25 கோடிக்கு மோர்கனை விலைக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.