3-வது ஒருநாள் ஆட்டம்: இந்திய அணியில் 3-வது மாற்றம்

தீபக் சாஹர் : கோப்புப்படம்
தீபக் சாஹர் : கோப்புப்படம்
Updated on
1 min read

ஒடிசாவின் கட்டாக் நகரில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியில் 3-வது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடந்து முடிந்தது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் நடந்து வருகிறது. இதுவரை 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன.

இந்திய அணியில் ஒருநாள் தொடருக்காக ஷிகர் தவண் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், அவருக்கு காயம் ஏற்படவே உள்நாட்டுத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார். அதன்பின் புவனேஷ்வர் குமாருக்கு தசைப்பிடிப்பு காரணமாக அவர் விலகியதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக சர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் விசாகப்பட்டிணத்தில் நடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு கீழ் இடுப்புபகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும் முழுமையாக குணமடையாததால், அவர் கட்டாக்கில் நடைபெற உள்ள 3-வது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக நவ்தீக் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.

3-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, கேதார் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in