

இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி தனது முதல் இன்னிங்ஸில் 89.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ்-வான் ஸில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. ஆமை வேகத்தில் ஆடிய ஹென்ரிக்ஸ் 76 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் அக் ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வான் ஸில்லுடன் இணைந்தார் குளோயெட். இந்த ஜோடி சிறப்பாக ஆட, 100 ரன்களைக் கடந்தது தென் ஆப்பிரிக்கா. இதன்பிறகு குளோயெட் 26 ரன்களில் ஆட்டமிழக்க, வான் ஸில்லுடன் இணைந்தார் ரமீலா. இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. ரமீலா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வான்ஸில் 4 ரன்களில் அதை கோட்டை விட்டார். 193 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் சேர்த்த வான் ஸில், ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் போல்டானார். டி காக் ரன் ஏதுமின்றியும், பவுமா 17 ரன்களிலும் நடையைக் கட்டினர். பின்னர் வந்தவர்களில் கேப்டன் டேன் விலாஸ் 24, பீடெட் 12 ரன்கள் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 89.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியத் தரப்பில் அக் ஷர் படேல் 5 விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் 3 விக்கெட்டு களையும், கரண் சர்மா 2 விக்கெட்டு களையும் வீழ்த்தினர்.