

2020-ம் ஆண்டு ஐபிஎல் டி 20 தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது. ஏல பட்டியலில் 186 இந்திய வீரர்கள், 143 வெளிநாட்டு வீரர்கள், உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த 3 வீரர்கள் என மொத்தம் 332 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இருந்து 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 73 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்.
ஏல பட்டியலில் மிக இளம் வயது வீரராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 வருடங்கள் 350 நாட் களான ‘சைனாமேன்’ இடது கை சுழற்பந்து வீச்சாளரான நூர் அகமது இடம் பெற்றுள்ளார். இந்திய இளம் வீரர்களில் மும்பை பேட்ஸ் மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், யு-19 கேப்டன் பிரியம் கார்க், தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் இஷான் பொரேல் ஆகி யோரை ஏலம் எடுப்பதில் 8 அணி யின் உரிமையாளர்களிடையே சற்று போட்டி நிலவக்கூடும்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் சதம் விளாசிய 22 வயதான மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த சிம்ரன் ஹெட்மையரும் கவனிக்கத்தக்க வீரராக உள்ளார். கடந்த சீசனில் பெங்களூரு அணி அவரை ரூ.4.2 கோடிக்கு வாங்கி யிருந்தது. தற்போது ஹெட்மைய ரின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், ஜோஸ் ஹசல்வுட், பாட் கம்மின்ஸ், கிறிஸ் லின் ஆகியோரையும் ஏலம் எடுப்பதில் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபட்சமாக கிங்ஸ் லெவன் அணி ரூ. 42.70 கோடியை இருப்பு வைத்துள்ளது. கொல்கத்தா அணி ரூ. 35.65 கோடியும், ராஜஸ்தான் ரூ. 28.90 கோடியும், பெங்களூரு ரூ. 27.90 கோடியும், டெல்லி ரூ. 27.85 கோடியும், ஹைதராபாத் ரூ.17 கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 14.60 கோடியும், மும்பை இந்தியன்ஸ் ரூ. 13.05 கோடியும் கையிருப்பு வைத்துள்ளன.