Published : 19 Dec 2019 08:34 AM
Last Updated : 19 Dec 2019 08:34 AM

சச்சினுக்குப் பிறகு ரோஹித் தான்: ‘ஹிட்மேன்’ சாதனைத் துளிகள்

ரோஹித் சர்மா உலகின் அச்சுறுத்தும் ஒரு தொடக்க வீரராக மாறிவிட்டார். காரணம் சீரான முறையில் அடிக்கடி அவர் பெரிய ஒருநாள் சதங்களை எடுத்து வருகிறார், உலகக்கோப்பையில் 5 சதங்களை அடித்தது முதலே இந்தியாவை வீழ்த்த வேண்டுமென்றால் ரோஹித்தை வீழ்த்த வேண்டுமென்ற நிலைக்கு உயர்ந்துள்ளார்.

விசாகப்பட்டிணம் ஒருநாள் போட்டியில் நேற்று நிதானித்து பிறகு படிப்படியாக அதிரடி ஆட்டம் ஆடி பிறகு எங்கு அடிக்க வேண்டும் என்று கேட்டுக் கேட்டு அடிக்கத் தொடங்கி 159 ரன்களை விளாசினார், இன்னொரு இரட்டைச் சத வாய்ப்பிருந்தது. ஆனால் அதற்காக அவர் பார்க்கவில்லை.

இந்நிலையில் 2019-ல் 7 ஒருநாள் சதங்களை விளாசி அவர் சாதனை புரிந்துள்ளார். 1998-ம் ஆண்டில் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தன் உச்சகட்ட பார்மில் இருந்த போது ஒரே ஆண்டில் 9 சதங்களை அடித்து சாதனையை வைத்துள்ளார், தற்போது ரோஹித் அவருக்கு அடுத்தபடியாக உள்ளார். இந்த ஆண்டில் ரோஹித் சர்மா அனைத்து வடிவங்களிலும் எடுக்கும் 10வது சதமாகும். இதில் 3 டெஸ்ட் சதங்களும் அடங்கும்.

குல்தீப் யாதவ் இந்தப் போட்டியில் எடுத்த ஹாட்ரிக் மூலம் ஒருநாள் போட்டிகளில் 2வது ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தார் குல்தீப் யாதவ். வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டாக், சமிந்தா வாஸ், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் 2 ஹாட்ரிக் சாதனைகள் புரிந்துள்ளனர். ஆனால் லஷித் மலிங்கா 3 ஹாட்ரிக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் 159 ரன்கள் இந்த ஆண்டின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராகும். 2013 முதல் 7 ஆண்டுகள் அவர் அந்த ஆண்டின் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தவராக இருந்து வருகிறார்.

227- ரன்கள் ரோஹித்-ராகுல் கூட்டணி 4வது பெரிய தொடக்கக் கூட்டணியாகும், இருவரும் 222 பந்துகள் ஆடியுள்ளனர். பந்துகள் கணக்கில் இந்திய அணியின் 3வது நீண்ட கூட்டணியாகும்.

387/5: இந்தியாவின் 9வது மிகப்பெரிய ஒருநாள் ஸ்கோராகும். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2வது பெரிய ஸ்கோர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x