

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுலின் அபாரமான சதம், ஸ்ரேயாஸ் அய்யரின் காட்டடி ஆட்டம் ஆகியவற்றால் விசாகப்பட்டிணத்தில் நடந்துவரும் 2-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ள இந்திய அணி.
முதலில் பேட்செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது.
பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான விசாகப்பட்டிணம் ஆடுகளத்தில் சேஸிங் செய்வதும் எளிதாக இருக்கும் கணிக்கப்பட்டாலும், இதுபோன்ற இமாலய இலக்கை விரட்டுவது மே.இ.தீவுகள் அணிக்கு கடினம்தான்.
தொடக்கத்தில் இருந்தே 8 ரன் ரேட்டில் அணியை நகர்த்தினால் மட்டுமே, அல்லது 8 ரன்ரேட்டுக்குகுறையாமல் கொண்டு சென்றால் மட்டுமே வெல்ல முடியும். இந்திய அணியில் பந்துவீச்சு ஷமி ஒருவரைத் தவிர பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்கு பலமில்லை ஆனால், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் மற்ற பந்துவீச்சாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் சுழற்பந்துவீச்சு என்ன பாடுபடப்போகிறது என்பது தெரியவில்லை.
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மா 138 பந்துகளில் 159 ரன்களும், கே.எல்.ராகுல் 102 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ராகுல் 104 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா சதம் அடித்தபின் தனது வழக்கமான காட்டடிக்கு திரும்பினார். அரைசதத்தை 67 பந்துகளிலும், அடுத்த 50 ரன்களை40பந்துகளிலும் கடைசி 50ரன்களை 25 பந்துகளிலும் ரோஹித் சர்மா அடித்தார். ரோஹித் சர்மா 138 பந்துகளில் 159 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடங்கும்.
ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்கு இது 28-வது சதமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டில் ரோஹித் சர்மா அடிக்கும் 7-வது சதம் இதுவாகும்.
ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் கூட்டணி இன்றும் காட்டடிஅடித்து மிரட்டினர். ஸ்ரேயாஸ் அய்யர் 32 பந்துகளில் 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரஸ்டன் சேஸ் வீசிய 47-வது ஓவரில் ஸ்ரேயாஸ்அய்யர் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்ளிட்ட 31 ரன்கள் சேர்த்தார். இந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு நாள் போட்டியில் அடிக்கப்பட்ட ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஒரு ஓவரில் 31 ரன்கள் அடித்து ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ஸ்ரேயாஸ் அய்யர்32 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் அடங்கும்.
துணையாக பேட் செய்த ரிஷப் பந்த் 16 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் 4 ஓவர்களில் 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ரிஷப் பந்த் தனது கணக்கில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். இந்தியஅணி 2 ஓவர்களில் 55 ரன்களும், கடைசி 5 ஓவர்களில் 79 ரன்களும் வெளுத்து வாங்கினர்.
இதில் யாரும் எதிர்பாராத சம்பவம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட்கோலி அரிதினும் அரிதாக கோல்டன் டக்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். கடந்த 6 ஆண்டுகளில் விராட் கோல் டக்அவுட் ஆவது இதுதான் முதல் முறையாகும். விராட் கோலியின் 11-ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் இது 13-வது டக்அவுட்டாகும்.
இந்திய அணி வீரர்களின் காட்டடி பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியாமல் மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் திணறினர். காட்ரெல், கீமோபால், ஜோஸப் ஆகியோரின் ஓவர்கள் தெறிக்கவிடப்பட்டன. ஜாதவ் 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சல்யூட் மன்னன் காட்ரெல் 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களையும், அல்சாரி ஜோஸப் 9 ஓவர்களில் 68 ரன்களும், கீமோ பால் 7 ஓவர்கள் வீசி 57 ரன்களும் வாரி வழங்கினர்.