

விசாகப்பட்டணத்தில் நடந்துவரும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அதாவது, விராட் கோலி களமிறங்கும் இந்த போட்டி அவருக்கு 400-வது சர்வதேச போட்டியாகும். 400-வது சர்வதேச போட்டிகளில் விளையாடும் 8-வது இந்திய வீரர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான விராட் கோலி இதுவரை 241 ஒருநாள் ஆட்டங்கள், 75 டி20 போட்டிகள், 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். உலக அளவில் 400 போட்டிகளுக்கு மேல் விளையாடிய 33-வது வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவிலும், உலக அளவிலும் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் எனும் பெருமை லிட்டில் மாஸ்டர் சச்சினையே சாரும். சச்சின் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதைத் தொடர்ந்து எம்.எஸ். தோனி(538), ராகுல் திராவிட்(509), முகமது அசாருதீன்(433), சவுரவ் கங்குலி(424), அனில் கும்ப்ளே(403), யுவராஜ் சிங் (402) ஆகியோர் 400 சர்வதேச போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர்
சர்வதேச அளவில் முதலிடத்தை சச்சின் இன்னும் தக்கவைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து இலங்கை முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனா(652), குமாரா சங்கக்கார(594), சனத் ஜெயசூர்யா(586), ரி்க்கி பாண்டிங்(560) ஆகியோர் உள்ளனர்.
இது தவிர ஒரு நாள் போட்டியில் ஜேக் காலிஸின் ரன்களை எட்டிப்பிடிக்க விராட் கோலிக்கு இன்னும் 56 ரன்களே தேவைப்படுகிறது. காலிஸ் தற்போது ஒருநாள் போட்டியில் 11,579 ரன்கள் சேர்த்து உலக அளவில் 7-வது இடத்தில் உள்ளார்.
தற்போது 240 ஒருநாள் போட்டிகளில் 11,524 ரன்களுடன் இருக்கும் கோலி, காலிஸின் சாதனையை கடக்க இன்னும் 56 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அவ்வாறு காலிஸ் சாதனையைக் கோலி கடந்தால் உலக அளவில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்சேர்த்த 7-வது வீரர் எனும் பெருமையைப் பெறுவார்
முதலிடத்தில் சச்சின் (18,426), அதைத் தொடர்ந்து சங்கக்கரா(14,234) , ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (13,704) ரன்களுடன் உள்ளனர்.
ஒரு ஆண்டில் அதிகபட்சமாக கோலி கடந்த 2017-ம் ஆண்டில் 1,460 ரன்கள் சேர்த்துள்ளார். அந்த ரன் குவிப்பை அவரே முறியடிக்க 169 ரன்கள் கோலிக்கு தேவை. தற்போது கோலி 1,292 ரன்களுடன் உள்ளார்.
.