தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆலோசகராக ஜாக் காலிஸ் நியமனம்

ஜேக் காலிஸ் : கோப்புப்படம்
ஜேக் காலிஸ் : கோப்புப்படம்
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸை நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரும், தேர்வுக் குழுத் தலைவராக, இயக்குனராக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறியதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தது. இதனால் அணியை சீரமைக்கும் நோக்கில் முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க நிர்வாகம் நியமித்து வருகிறது. ஓய்வு அறிவித்த வீரர்களையும் மீண்டும் அணிக்குள் சேர்க்கவும் பேச்சு நடந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்ட தகவலில், " தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேக் காலிஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக கோடைகாலம் முழுமைக்கும் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியில் இன்றே காலிஸ் இணைவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

519 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள காலிஸ் இதுவரை 25 ஆயிரத்து 534 ரன்கள் சேர்த்துள்ளார், 577 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். காலிஸ் மொத்தம் 166 டெஸ்ட் போட்டிகளிலும், 328 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்

44 வயதாகும் காலிஸ் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 45 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களும் காலிஸ் அடித்துள்ளார்.

பயிற்சியாளர் பதவிக்கு காலிஸ் ஒன்றும் புதிதல்ல. ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக காலிஸ் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in