Published : 18 Dec 2019 11:05 AM
Last Updated : 18 Dec 2019 11:05 AM

சதம் அடித்த பிறகு 14 போட்டிகளுக்கு என்னைத் தேர்வு செய்யவில்லை, ஏன்? - புரியாத புதிர் குறித்து மனோஜ் திவாரி மனம் திறப்பு

கொல்கத்தாவைச் சேர்ந்த பெங்கால் வீரர், ஐபிஎல் கிரிக்கெட் வீரரான மனோஜ் திவாரியின் வாழ்க்கையில் காயங்கள் விளையாடியது என்றால் இந்திய அணித்தேர்வு நிர்வாகமும் விளையாடி விட்டது.

இன்று நம்பர் 4 இடத்துக்கான பொருத்தமான வீரரை கண்டுபிடிக்கத் திணறி வரும் இந்திய அணித்தேர்வுக்குழு மற்றும் நிர்வாகம் அன்று அணியின் தேவைக்காக 4ம் இடத்தில் இறங்கி ஆடி மே.இ.தீவுகளுக்கு எதிராக 2011-ல், அதுவும் சென்னையில் சதம் அடித்து வெற்றிக்கு இட்டுச் சென்ற மனோஜ் திவாரி அதன் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இரண்டு சந்தர்ப்பங்கள் என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் விரும்பியதற்கு இணங்க நடக்கவில்லை. வங்கதேச தொடரில், 2006-07 தொடரில் என் முதல் பயணத்திலேயே காயமடைந்தேன். போட்டி தொடங்குவதற்கு முன்னரே என் தோள்பட்டையில் காயமடைந்தேன். பிறகு ஆஸ்திரேலியாவில் அறிமுகமாக 2008 சிபி சீரிஸ் ஒருநாள் தொடர் வரைக் காத்திருந்தேன். அந்தத் தொடரில்தான் ரோஹித் சர்மா ரோஹித் சர்மாவான தொடர் அது.

அதனால் 3 ஆண்டுகள் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற காத்திருக்க வேண்டியதாயிற்று. 2011-ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நல்ல முறையில் ஆடி பார்மில் இருந்ததால் மே.இ.தீவுகள் தொடரில் இருந்தேன். மே.இ.தீவுகளில் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதுவும் தொடக்க வீரராகத்தான், அது எனக்கு வழக்கமான டவுன் அல்ல. நான் வழக்கமாக ஆடுவது 4ம் நிலைதான். தொடரின் 5ம் போட்டியில் 4ம் நிலையில் இறங்க வாய்ப்பு கிடைத்தது. நான் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தேன். நன்றாக செட் ஆகி ஆட்டமிழந்தேன்.

மீண்டும் நான் நிறைய போட்டிகளில் நீக்கப்பட்டேன். மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உள்நாட்டு ஒருநாள் தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டேன். ஏனெனில் சேவாக் வரவில்லை என்று கூறிவிட்டார். 4ம் நிலையில்தான் களமிறங்குவேன் என்றேன். இந்தத் தொடரின் கடைசி போட்டியில் சதம் அடித்தேன் (104 ரன்கள்).

இதனையடுத்த 14 போட்டிகளில் நான் ஆடும் 11 வீரர்களில் ஒருபோதும் தேர்வு செய்யப்பட்டதில்லை. இந்த 14 போட்டிகளும் 6 மாதகாலக் கட்டத்தில் நடைபெற்றது. ஏன் என்னைத் தேர்வு செய்யவில்லை என்று என்னிடம் ஒருபோதும் யாரும் தெரிவித்ததில்லை. தொடர்பு படுத்தவில்லை எனில் ஏன் என் ஆட்டத்தில் என்ன தவறு என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படுவது சகஜமே.

அந்த சமயத்தில் அமைதியாக இரு, இதைப்பற்றியெல்லாம் அதிகம் யோசிக்காதே, அப்போதுதான் வாய்ப்பு இருந்தால் கிடைக்கும் என்று எனக்கு அறிவுரை கூற ஒருவரும் இல்லை.

இவ்வாறு கூறிய மனோஜ் திவாரி, தனக்கு வயது 34 ஆகிறது என்றும் இன்னும் 10 ஆண்டுகள் ஆடுவேன் என்றும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x