Published : 17 Dec 2019 06:11 PM
Last Updated : 17 Dec 2019 06:11 PM

ஜடேஜா ரன் அவுட்டுக்கு எதிரான கோலியின் கோபம் நியாயமற்றதே: புதிய தகவலின் அடிப்படையில் ரன் அவுட் முறையீடு சரியானதே

ஞாயிறன்று சென்னையில் மேற்கிந்திய தீவுகளிடம் இந்தியா படுதோல்வி அடைந்த ஒருநாள் போட்டியில் ஜடேஜா ரன் அவுட்டிற்கு முதலில் நாட் அவுட் சொல்லி விட்டு பிறகு ரீப்ளேயைப் பார்த்து களநடுவர் 3வது நடுவரின் தீர்ப்பை ஆலோசித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது, இதனை விராட் கோலியும் வெளிப்படையாக விமர்சித்தார்.

கோலி சிறுபிள்ளைத்தனமாக அதனை பேட்டியிலெல்லாம் புகாராக தெரிவித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார், ஆனால் உண்மை என்னவெனில் களநடுவர் ஜார்ஜ் ரீப்ளேயைப் பார்த்துவிட்டு 3வது நடுவரை அழைக்கவில்லை. மாறாக 3வது நடுவர் ராட் டக்கர் டிவி ரீப்ளேக்களைப் பார்த்த பிறகு களநடுவருக்கு ரெஃபர் செய்யுமாறு ரேடியோ மூலம் கேட்டுக் கொண்டதையடுத்தே ரெஃபர் செய்து அவுட் கொடுக்கப்பட்டது என்பது இப்போது தெளிவாகியுள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்தி ஒன்று உறுதி செய்கிறது.

இதனை வெளியில் இருந்தவர்கள் கூறியதையடுத்தே மே.இ.தீவுகள் அணி வீரர்கள் ரிவியூ செய்ய வேண்டும் என்று களநடுவரை வற்புறுத்தியதாகவே கோலி மிகவும் தவறாகப் புரிந்து கொண்டார், அவர் பல விஷயங்களை தவறாகப் புரிந்து கொள்வது போலவே.

ராட் டக்கர்தான் ஜடேஜா கீரீசைத் தாண்டி ரீச் செய்யவில்லை , பந்து ஸ்டம்பை அடிக்கும் போது ஜடேஜா கிரீசுக்கு வெளியே இருந்ததை களநடுவருக்கு அறிவுறுத்தினார்.

உண்மை என்னவெனில் ராஸ்டன் சேஸ் அடித்த பிரமாத பிக் அண்ட் த்ரோ ஸ்டைல் ரன் அவுட்டை நடுவர் ஜார்ஜ் பார்த்த இடத்தின் கோணத்திலிருந்து அவர் ரீச் செய்ததான ஒரு தோற்றம் கிடைத்திருக்கும். எது எப்படியோ அவுட் அவுட் தான் என்று தீர்ப்பளித்தது ஏன் கோலிக்கு கோபத்தை அளிக்க வேண்டும்? உடனே பவுண்டரிக்கு அருகில் சென்று 4வது நடுவரிடம் இதனை புகார் தெரிவிக்கிறார்.

மேலும் ஹர்ஷா போக்ளேயிடம் விராட் கோலி எந்த ஒரு விளையாட்டு உணர்வும் இல்லாமல், சிறுபிள்ளைத்தனமாக, “களத்தில் நடப்பதை வெளியில் இருப்பவர்கள் தீர்மானிக்க முடியாது, அதுதான் இந்த விஷயத்தில் நடந்தது” என்றார். இது தோல்வியைத் தாங்க முடியாத அப்பட்டமான வெறுப்பின், விரக்தியின் வெளிப்பாடு என்று தெரிந்தது. கோலி விரக்தியடைய வேண்டியதில்லை அடுத்த போட்டியிருக்கிறது, அதற்கு அடுத்த போட்டி இருக்கிறது, ஒழுங்காக கேப்டன்சி செய்து ஆடினால், அணியை சரியான கலவையில் தேர்வு செய்தால் வெற்றி பெறலாமே? ஏன் அனாவசியக் கோபம்?

பிறகு பந்து ‘டெட் பால்’ ஆனது என்ற பேச்சுக்கும் இடமில்லை, அடுத்த பந்து வீசும் வரை அணிகள் அப்பீல் செய்ய விதியில் இடமுண்டு. எனவே கோலியின் கோபம் நியாயமற்றது என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x