கொதிக்கிறது கொல்கத்தா: ஐபிஎல் 2020 ஏலம் இந்த முறை நடக்குமா?

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐபிஎல் 2020-ம்ஆண்டு சீசனுக்கான ஏலம் வரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னும் ஏலம் நடப்பதற்கு 72 மணிநேரமே இருக்கும் நிலையில் கொல்கத்தாவில் நிலவும் பதற்றமான சூழல் தொடருமா அல்லது இயல்பு நிலைக்கு வருமா என்பது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 4 நாட்களாகப் போராட்டம், வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் நீடித்து வருகின்றன, ரயில் போக்குவரத்து பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய பேரணியும் நடத்தப்பட்டது.

இந்த சூழலில் கொல்கத்தாவில் வரும் 19-ம்தேதி ஐபிஎல் 2020-ம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடத்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், போராட்டம் நீடித்து, பதற்றம் அதிகரித்தால் ஏலம் நடக்குமா அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்பதுதெரியவில்லை.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் கொல்கத்தாவில் முதல் முறையாக நடக்கும் ஐபிஎல் ஏலம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஐபிஎல் அணியின் ஒரு அதிகாரி கூறுகையில் " ஐபிஎல் போட்டி ஏலத்துக்காக 18-ம் தேதி இரவே பலரும் வந்துவிடுவார்கள், ஏலம் முடிந்தபின் 19-ம் தேதி இரவு அல்லது 20-ம் தேதிதான் புறப்படுவார்கள். அதுவரை கொல்கத்தாவில் பதற்றமான சூழல் இல்லாமல் இருக்க வேண்டும். போலீஸார் பாதுகாப்பு தேவை என்று கேட்கவும் பிசிசிஐ அதிகாரிகள் முடிவு செய்யவில்லை.

காத்திருப்போம், என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அதேசமயம், கொல்கத்தாவில் இதே பதற்றமான சூழல் நீடித்தால் மாற்று இடத்தில் ஏலத்தை நடத்துவதுகுறித்து பிசிசிஐ ஏதும் திட்டம் வைத்திருக்கிறதா என்ற தகவலும் இல்லை. இருப்பினும் பிசிசிஐ மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஏலம்நடக்கு்ம் போது எந்த இடையூறு வராமல் பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் அல்லது மாற்று இடத்தை தேர்வு செய்யும் என நம்புகிறோம். விரைவில் பிசிசிஐ அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிகிறது" எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in