

டி20 கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிகமான ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயிலுக்கு அடுத்து, கெய்ரன் பொலார்ட் இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடந்த வான்ஹடே மைதானத்தில் நடந்த 3-வது டி20 போட்டியில் மே.இ.தீவுகள் அணி 67 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆனால், அந்தப் போட்டியில் அணியில் உள்ள மற்ற வீரர்கள் சொதப்பியபோதிலும், கேப்டன் பொலார்ட் நிலைத்து ஆடி 68 ரன்கள் சேர்த்தார்.
இந்த 68 ரன்களைச் சேர்த்தபோதுதான் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பொலார்ட் பெற்றார்.
32 வயதாகும் கெய்ரன் பொலார்ட் இதுவரை 68 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4 அரை சதங்கள் உள்பட 1058 ரன்கள் சேர்த்ததுள்ளார். ஆனால், ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் 496 டி20 போட்டிகளில் 9,935 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம் 49 அரை சதங்கள் அடங்கும். இதில் ஐபிஎல், கரிபீயன்லீக், வங்கதேச லீக், பாகிஸ்தான் லீக் உள்ளிட்ட அனைத்தும் சேரும்.
பொலார்டைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம் 370 டி20 போட்டிகளில் விளையாடி 9 ஆயிரத்து 922 ரன்கள் சேர்த்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக் 4-வது இடத்தில் உள்ளார். இவர் 362 டி20 போட்டிகளில் விளையாடி 9 ஆயிரத்து 176 ரன்கள் சேர்த்துள்ளார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 277 போட்டிகளில் 9 ஆயிரத்து 90 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்தில் உள்ளார். இதுவரை கோலி 274 டி20 போட்டிகளில் விளையாடி 8 ஆயிரத்து 739 ரன்களும், அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா 324 போட்டிகளில் 8 ஆயிரத்து 502 ரன்களும் சேர்த்துள்ளனர்.
முதலிடத்தில் மே.இ.தீவுகள் அணியின் காட்டடி வீரர் கிறிஸ் கெயில் உள்ளார். கெயில் 400 டி20 போட்டிகளில் விளையாடி 13 ஆயிரத்து 152 ரன்கள் குவித்துள்ளார். இதில் 22 சதங்கள், 81 அரை சதங்கள் அடங்கும். டி20 போட்டிகளிலேயே அதிகமான ரன்கள் குவித்த வீரர் எனும் சாதனையை கெயில் தக்கவைத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 2013-ம் ஆண்டு சீசனில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 175 ரன்களை கெயில் அடித்து சாதனை படைத்துள்ளார். இதுவரை எந்த வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.