

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் காயமடைந்த ஷிகர் தவணுக்குப் பதிலாக எதிர்பார்ப்புக்கு இணங்க நன்றாக ஆடி வரும் மயங்க் அகர்வால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சையத் முஷ்டாக் அலி டிராபியின் போது முழங்காலில் காயமடைந்தார் ஷிகர் தவண் என்று கூறப்பட்டது. ஆனால் பிசிசிஐ, இந்திய அணி நிர்வாகத்தைப் பொறுத்தவரை காயங்கள் பற்றிய வெளிப்படைத்தன்மை எதுவும் இருக்காது, அணியிலிருந்து நீக்கி விட்டோம் என்று வெளிப்படையாக கூறுவதற்குப் பதிலாக காயம் என்பார்கள்.
ஏற்கெனவே டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இவருக்குப் பதிலாக அணியில் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் எத்தனை தோற்றாலும் சாம்சனுக்கு வாய்ப்பளிக்காமல் அவரை எவ்வளவு வெறுப்பேற்றி காலி செய்ய முடியுமோ அப்படிச் செய்வார்கள், இன்று ஒருவேளை 3வது டி20யில் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், நெருக்கடியான போட்டி தொடரை விட்டு விடக்கூடாது என்ற அழுத்தம் நிறைந்த போட்டியில் அவரை ஆட வைத்து அவர் தோல்வி அடைந்தால் ‘வாய்ப்பு கொடுத்தோம், இளைஞர்கள் அதனை கவ்விக் கொள்வதில்லை’ என்பார்கள்.
முதலில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் காயமடைந்த வீரரை ஏன் அணியில் தேர்வு செய்ய வேண்டும்? அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு ஷிகர் தவண் பேட்டிங் பார்மிலும் இல்லை, பேட்டிங்கை மறந்தது போல் ஆடுகிறார், முறையாகப் பயிற்சி எடுப்பதில்லை போன்ற புகார்கள் அவர் மீது உண்டு.
மயங்க் அகர்வால் உள்நாட்டு, சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் எண்கள் அடிப்படையில் மிகச்சிறந்த வீரர் ஆனால் அவர் பதிலி வீரராகத் தேர்வு செய்யப்படுகிறார்.
தென் ஆப்பிரிக்கா தொடர் ஆடிவிட்டு உடனடியாகவே அகர்வால் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார், இப்போது கூட திண்டுக்கல்லில் அவர் தமிழ்நாடு அணிக்கு எதிராக ஆடிவருகிறார்.
கிரிக்கெட்டை நேசிக்கும் வீரர்களுக்கு இடமளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும், இடத்தைத் தக்க வைக்க ஒரு அரைசதம் அடித்து விட்டு 9 போட்டிகளில் சொதப்பும் வீரர்களை அணியில் சேர்க்கக் கூடாது என்பது தேர்வுக்குழுவின் கொள்கையாக இருக்க வேண்டும்.