

பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் டிம் பெய்ன் களத்தில் இருக்கும் போதே களவியூகம் அமைத்தது குறித்து ஸ்டீவ் ஸ்மித் ‘ஒயிட் ஆன்ட்டிங்’ செய்கிறார் என்று ஸ்மித்துக்கு எதிராக மிகவும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார் இயன் சாப்பல்.
ஒயிட் ஆன்ட்டிங் (white-anting) என்பது ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் ஒரு இழி சொற்றொடர் ஆகும். இதன் அர்த்தம் பொதுவாக ஒரு குழுவில் இருந்து கொண்டே அந்தக் குழுவுக்கு எதிராகவே சதி செய்பவர் அதாவது கரையான் போன்று உள்ளாக எந்த ஒன்றையும் அரித்து புறத்தில் தான் அரித்ததன் சுவடு தெரியாமல் இருப்பது. ஆஸ்திரேலியாவில் மிகவும் இழுக்கான, ஒருவரை சிறுமைப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு பதமாகும் இது. இன்னொரு விதத்தில் பெய்னுக்கு ஸ்மித் குழிதோண்டப்பார்க்கிறார் என்றும் கொள்ளலாம்.
கேப்டன் பெய்ன் இருக்கும் போதே ஸ்மித் களவியூகம் அமைத்ததை இயன் சாப்பல் இவ்வாறு ஸ்மித்தை நோக்கி இழிசொல்லாகப் பிரயோகித்ததைக் கண்டு ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் இயன் சாப்பலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது:
உண்மையில் இயன் சாப்பல் கூறிய கருத்து எனக்கு விசித்திரமாக இருந்தது. அனைத்து கேப்டன்களையும் போல் அணியில் உள்ள அனுபவஸ்தர்கள் முன்னாள் கேப்டன்களை கலந்தாலோசிப்பதில் என்ன தவறு.
அவர் இதைப்போய் ஏன் இப்படி விமர்சிக்க வேண்டும்? அணியில் உள்ள அனைவருமே அணியின் கேப்டன் போல் சிந்திக்க வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
எனவே பெய்ன் இவர்களை கலந்தாலோசிக்காமல் இருந்தால் அது முட்டாள்தனமானது. அனைத்து வீரர்களும் தலைமைத்துவ தாக்கத்தை களத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறோம்.
என்று பதிலடி கொடுத்தார் ஜஸ்டின் லாங்கர்.