

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் தமிழ்நாடு-கர்நாடகா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அனல் பறந்தது. தமிழ்நாடு அணி கேட்ச்களை விட்டது போதாதென்று நடுவர்கள் வேறு விளையாடி விட்டனர்.
தமிழ்நாடு பவுலர்கள் குறிப்பாக அஸ்வின் எவ்வளவு தன்னம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் முறையிட்டாலும் நாட் அவுட் என்பதில் உறுதியாக இருந்தனர். பலமுறை நெருக்கமான பந்துகளுக்குக் கூட நடுவர் சந்தேகத்தின் பலன்களை கர்நாடகா பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து அஸ்வின் கடுப்பானார், ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த முரளி விஜய் தொப்பியைக் கழற்றி ஓங்கினார், ஆனால் நல்ல வேளையாக கோபத்தில் தரையில் அடிக்கவில்லை.
களநடுவர்களான பண்டிட் மற்றும் அனில் தாண்டேகர் ஆகியோர் படுத்தி எடுத்தனர். ஆனால் கோபம் எப்போது உச்சக்கட்டம் சென்றது எனில் கர்நாடகா இடது கை மட்டையாளர் பவன் தேஷ்பாண்டே 56 ரன்களில் இருந்த போது இருமுறை அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பர் என்.ஜெகதீசனிடம் கேட்ச் ஆனார், ஆனால் பலத்த முறையீட்டுக்கு நடுவர்கள் கல் போல் இருந்தனர்.
முன்னதாக அஸ்வின் பந்து ஒன்றில் பின் கால்காப்பில் வாங்கியும் பவன் தேஷ்பாண்டேவுக்கு அவுட் தர மறுத்தனர் நடுவர்கள்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு பி.எஸ்.சரத் என்ற கர்நாடகா வீரருக்கு ரவி அஸ்வின் தொண்டை வறள எல்.பி. அப்பீல் செய்தார், ஆனால் நடுவர் கல்லாகச் சமைந்தார். சரத் அப்போது ஜீரோவில் இருந்தார்.
இந்த அனைத்துத் தீர்ப்புகளும் நடுவர் பண்டிட்டின் கைங்கரியம். டி.ஆர்.எஸ். முறையும் இந்தப் போட்டியில் இல்லை.
இந்நிலையில் நாட் அவுட் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த முரளி விஜய்க்கு ஆட்ட நடுவர் 10% சம்பளத்தொகையிலிருந்து அபராதம் செலுத்த உத்தரவிட்டார்.