

மலேசியாவில் நடைபெற்ற மூத்தோர் ஆசிய தடகளப் போட்டியில் பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியையான ஜெ.திலகவதி (72), 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மலேசியாவில் டிச.2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்ற 21-வது மூத்தோர் ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்ற திலகவதி 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், 80 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
இதுகுறித்து திலகவதி கூறும்போது, “பணி ஓய்வு பெற்றும் விளையாட்டின் மீதான ஆர்வம் குறையாததால் மூத்தோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். அண்மையில், மலேசியாவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல பிரிவுகளில் விளையாடினோம். இதில் தங்கம் உட்பட 3 பதக்கங்கள் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.