Published : 09 Dec 2019 03:42 PM
Last Updated : 09 Dec 2019 03:42 PM

கிளைவ் லாய்ட், விவ் ரிச்சர்ட்ஸ் கேப்டன்சி வரிசையில் கோலியை வைத்து பாக். கேப்டன்சியை விமர்சித்த இயன் சாப்பல்

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் 2-0 என்று தோற்றது பெரிதல்ல, தோற்ற விதம் கடும் விமர்சனங்களுக்கு ஆளானதோடு, மிஸ்பா மேற்பார்வையில் அசார் அலியின் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

போட்டியை தொலைக்காட்சியில் பார்த்த நம்மில் பலருக்கும் அசார் அலி செய்த தவறுகள் பளிச்சிட்டன. நசீம் ஷா-வை முதலில் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்தது முதல் அவருக்கு அமைத்த பீல்டிங் செட் அப் ஏமாற்றமளித்ததோடு, ரன் பசியுடன் அலையும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நசீம் ஷா இரையானதுதான் நடந்தது. ஆஸி. மைதானங்களில் வெகு விரைவிலேயே பீல்டர்களை தள்ளி தூரத்தில் நிறுத்திய போக்கினால் ஆஸி. அணி பாகிஸ்தான் மீது ஏறி மிதித்தது.

இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் இயன் சாப்பல் சமீபத்தில் எழுதிய பத்தி ஒன்றில் ஆஸ்திரேலியாவுக்கு வரும் போது பவுன்ஸ் பிட்ச்களில் பேட்டிங் பற்றிய கவலைகளுடனே துணைக்கண்ட அணிகள் வருகின்றன, ஆனால் கேப்டன்சி பற்றி கவலைப்படுவதில்லி, ‘ஆஸ்திரேலியாவில் கேப்டன் சி என்பது மற்ற இடங்களில் செய்வது போல் சுலபமல்ல’ என்று கூறி மே.இ.தீவுகளின் கிளைவ் லாய்ட், விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோருடன் கடந்த முறை விராட் கோலியின் கேப்டன்சியையும் பாராட்டிக் குறிப்பிட்டு, பாகிஸ்தானின் மோசமான கேப்டன்சியை விமர்சித்துள்ளார்.

அவர் தன் பத்தியில் எழுதியதாவது:

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் 14 தொடர் டெஸ்ட் தோல்விகளைச் சந்தித்தது ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் ஒரு பாடமாகா அமையும்.

பயிற்சி ஆட்டங்களை பவுன்ஸ் பிட்ச்களில் ஆடி பாகிஸ்தான் இந்தத் தொடருக்கான தயாரிப்பில் போதுமானதாக விளங்கினாலும் ஒன்றேயொன்றை மறந்து விட்டனர், அதுதான் கேப்டன்சி.

கடந்த 3 தொடர்களிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி படுமோசமானது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 2010-ம் ஆண்டில் சிட்னியில் அப்படி ஆஸி. யை குறைந்த ரன்களுக்குக் கட்டுப்படுத்திய போதும் மொகமது யூசுப் தனது மோசமான கேப்டன்சியை அரங்கேற்றி வெற்றியின் பிடியிலிருந்து தோல்வியைப் பிடுங்கிச் சென்றதுதான் நடந்தது.

மேலும் புண்களைக் கிளறிவிடுவது போல் 2016-17 தொடரில் ஆஸ்திரேலிய ரன் விருந்தைத் தொடங்கி வைத்த மிஸ்பா உல் ஹக் இந்தத் தொடரில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2019-20 பாக் கேப்டன் அசார் அலி செய்த களவியூக அமைப்பைப் பார்க்கும் போது மிஸ்பா உல் ஹக்கின் ஆஸி. தொடர் புத்தகத்தை அட்டையிலிருந்து அட்டை வரை படித்திருப்பார் போன்று தெரிந்தது...

துணைக்கண்ட கேப்டன்களுக்கு இங்கு சாதகமில்லாமல் போகும் அம்சம் என்னவெனில் அவர்கள் நாட்டுப் பிட்ச்களில் ஸ்பின் பவுலிங்குக்கு ஏற்றவாறு எதிரணி பேட்ஸ்மென்களை சுற்றி பீல்டர்களை நிறுத்துவது வழக்கம், அப்படியில்லாமல் மாற்று உத்திகள் தேவைப்படும் இடத்தில் அவர்கள் சரியாகச் செயல்பட முடிவதில்லை.

ஆஸ்திரேலியா தொடருக்கு வருவதற்கு முன்பாக கேப்டன்சி பற்றிய விவாதத்தை அனைத்து அணிகளும் நடத்துவது அவசியம். ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற வேகப்பந்து வீச்சு மிக முக்கியமாகும். 1932-33-ல் ‘பாடி லைன்’பவுலிங்கை அறிமுகம் செய்ததன் மூலம் டக்ளஸ் ஜார்டைன் இதனை நன்றாகவே புரிந்து கொண்டார். கிளைவ் லாய்ட் மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் தலைமை மே.இ.தீவுகள் அணியும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்களைக் களமிறக்கியதன் மூலம் பிரச்சினைகளை சரிவர புரிந்து கொண்டனர்.

2018-19 ஆஸி. தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி பலதரப்பட்ட பந்து வீச்சை திறமையாகப் பயன்படுத்தினார். தங்களது திறமையான வேகப்பந்து வீச்சு வரிசை மூலம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் வெற்றியைச் சாதித்தார்.

ஆஸ்திரேலியாவை பிரச்சினைக்குள்ளாக்கும் பந்து வீச்சு பாகிஸ்தானிடம் உள்ளது, ஆனால் தவறான வழிகாட்டுதல் இவர்களின் திறமையை வீணடித்தது. இப்போது வந்த பாக். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுபவமில்லை என்பது ஒருபுறம், தாறுமாறாக வீசும் வாய்ப்புள்ளது என்ற போதிலும் மோசமான கேப்டன்சியும் சேர்ந்து கொண்டது.

களவியூகத்தில் இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே பீல்டர்களைத் தொலைவில் நிறுத்துவது தவறான வழிகாட்டுதல் எனும் போது ஆஸ்திரேலியாவில் அதனைச் செய்தால் அத்துடன் கதை முடிந்தது என்றே அர்த்தம். பவுண்டரி நீளமானது என்பதால் பந்துகளை அங்கு அடிக்கும் போது 2-3 ரன்களை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. இது அடிக்கடி நடக்கும் போது நல்ல ப்ளேயர்கள் பவுண்டரிகளையும் அடிக்க முடியும். பீல்டிங் அணி ஆஸ்திரேலியாவுக்கு எந்த வித நெருக்கடியும் ஏற்படுத்தாமலேயே சுலபமாக ரன்கள் வந்து சேரும்.

கடந்த 3 தொடர்களிலும் பாகிஸ்தான் கேப்டன்கள் சாதித்த களவியூகம் ஆஸி. பேட்ஸ்மென்கள் தாங்களாகவே அவுட் ஆனால்தான் உண்டு என்பது போல் இருந்தது...

கடந்த தொடரில் நன்றாக ஆடியிருந்தாலும் அடுத்த தொடரில் மேலும் சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியுடன் இந்திய அணி இறங்கினாலும் விராட் கோலி அடுத்த தொடரில் வித்தியாசமான வேறு சவாலை எதிர்கொள்ள நேரிடலாம்.

2020-21 தொடரில் இந்தியாவுக்கு எதிராக 2 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆஸ்திரேலியா பரிசீலித்து வருகின்றனர், இது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருந்தாலும் இந்தியாவிடம் வலுவான பந்து வீச்சுக் கூட்டணி இருப்பதாலும் விராட் கோலி இங்கு தன் கேப்டன்சியில் கைதேர்ந்திருப்பதாலும் இந்த பகலிரவு டெஸ்ட் உத்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் திரும்ப வாய்ப்புள்ளது.

சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அணிகள் கேப்டன்சியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டால் பாகிஸ்தானைப் போன்று ஆட வேண்டிய நிலைதான் ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x