Published : 09 Dec 2019 10:30 AM
Last Updated : 09 Dec 2019 10:30 AM

இப்படி பீல்டிங் செய்தால் எவ்வளவு ரன் எடுத்தாலும் போதாது: இந்திய அணியின் மோசமான பீல்டிங் குறித்து கோலி காட்டம்

மோசமாக பீல்டிங் செய்தால் எந்த ஒரு ரன் இலக்கை நிர்ணயித்தாலும் விரயமே, தோல்விதான் மிஞ்சும் என்று கேப்டன் விராட் கோலி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

2வது டி20 போட்டியில் மே.இ.தீவுகள் அணி பிரமாதமாக பவுலிங் செய்ததோடு பேட்டிங்கிலும் பவர் ஹிட்டிங்கில் இந்திய பவுலிங்கை மண்ணைக் கவ்வச் செய்தது. 8 விக்கெட்டுகளில் வென்று தொடரை 1-1 என்று சமன் செய்து அடுத்த போட்டியில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஷ்வர் குமார் வீசிய 5வது ஓவரில் 2 கேட்ச்கள் தவற விடப்பட்டன. இதில் லெண்டில் சிம்மன்ஸ், எவின் லூயிஸ் ஆகியோர் தப்பினர். சிம்மன்ஸ் 6 ரன்களில் இருந்த போது வாஷிங்டன் சுந்தர் மிட் ஆஃபில் நேரடியான எளிதான கேட்ச் வாய்ப்பை தவற விட்டார். லெண்டில் சிம்மன்ஸ் கடைசியில் 45 பந்துகளில் 67 என்று நாட் அவுட்டாகத் திகழ்ந்து அணியின் வெற்றியில் முக்கியப் பங்களிப்பு செய்தார்.

இவர் தவற விட்ட பிறகு அதே ஒவரில் ரிஷப் பந்த் கடினமான கேட்ச் வாய்ப்பை தவற விட்டார். அப்போது எவின் லூயிஸ் 16 ரன்களில் இருந்தார். பிறகு 17வது ஓவரில் நிகோலஸ் பூரனுக்கு ஷ்ரேயஸ் அய்யர் ஒரு கேட்சைத் தவற விட்டார், இந்த வாய்ப்புகள் மிக முக்கியமாக இந்திய தோல்வியில் பங்களிப்பு செய்தன. பூரன் அப்போது 18 ரன்களில் இருந்தார். கேட்சஸ் வின் மேட்சஸ் என்பார்கள் அதுதான் இந்திய அணியின் பலவீனம் என்று இப்போது புரிந்துள்ளது.

இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது:

இன்னும் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் பாருங்கள், இப்படி பீல்டிங் செய்தால் எந்த ஒரு ரன் எண்ணிக்கையும் போதாமலேதான் போகும்.

கடந்த 2 போட்டிகளிலும் பீல்டிங் நாம் நிர்ணயித்த தரநிலைகளில் இல்லை. முதல் 4 ஓவர்களில் நன்றாக வீசினோம், அழுத்தம் ஏற்படுத்தினோம். பிறகு ஒரே ஓவரில் 2 கேட்ச்களை கோட்டை விட்டோம் அதுவும் டி20 போட்டியில். இதற்கான விலையைக் கொடுத்தோம். 2 விக்கெட்டுகளை ஒரே ஒவரில் வீழ்த்தியிருந்தால் அவர்கள் மீது அழுத்தம் ஏற்பட்டிருக்கும்.

நாம் எங்கு தவறு செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது கண்கூடு, நாம் அனைவருமே பார்த்தோம். பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை. பீல்டிங்கில் தைரியமாக இருக்க வேண்டும், கேட்ச்களைத் தவறவிடுவது பற்றி கவலைப்படக்கூடாது. என்றார் கோலி.

கோலியே கடினமான கேட்ச் ஒன்றைப் பிடித்தார், ஷிம்ரன் ஹெட்மையர் பெவிலியன் திரும்பினார், அது பற்றி அவர் கூறும்போது, “கையில் ஒட்டிக்கொள்ளுமே அந்த வகையில் இதுவும் ஒரு கேட்ச். அதிர்ஷ்ட வசமாக கையில் உட்கார்ந்தது. கடந்த போட்டியில் ஒரு கையை நீட்டி கேட்சை தவற விட்டேன். நாம் முயற்சி செய்ய வேண்டும் சில வேளைகளில் கையில் ஒட்டும் சில வேளைகளில் ஒட்டாது.

ஷிவம் துபே முன்னால் இறக்கப்பட்டது குறித்து...

பிட்ச் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும் என்பதும் இதனால் ஸ்பின்னரை அவர்கள் முதலிலேயே பயன்படுத்துவார்கள் என்பதும் தெரியும் அதனால் ஷிவம் துபேயை இறக்கி ஏன் முயற்சிக்கக் கூடாது என்று எண்ணினோம். அது பயனளித்தது.

முதல் 16 ஓவர்களில் 144/4 என்று நன்றாக இருந்தோம். அங்கிருந்து இன்னும் 40-45 ரன்கள் அடித்திருக்க வேண்டும் ஆனால் 26 ரன்கள்தான் எடுத்தோம். இந்த இடத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஷிவம் துபே அடித்த ரன்கள் இல்லையெனில் 170-ம் கடினமாகியிருக்கும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி பிட்சை பிரமாதமாக கணித்தனர். பந்து வீச்சில் கட்டர்கள், வேகத்தில் மாற்றம் என்று எங்களை எழும்ப விடவில்லை.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x