

திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதலாவது டி20 தொடரில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் 2-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டி20 போட்டியில் பங்கேற்ற அதே வீரர்கள்தான் பங்கேற்கிறார்கள்.
கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்ஸன், திருவனந்தபுரத்தில் போட்டி நடப்பதால், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது. ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பு வழங்காமல் நீக்கப்பட்டார். ஆனால், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது, சாம்ஸனுக்கு மறுக்கப்படுவது ஏன் எனத் தெரியவில்லை.
மே.இ.தீவுகள் அணியில் விக்கெட் கீப்பர் ராம்தினுக்கு பதிலாக பூரண் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வகையில் மே.இ.தீவுகள் அணியிலும் முதல் டி20 போட்டியில் விளையாடிய வீரர்களே விளையாடுகின்றனர்.
ஆடுகளம் எப்படி
ஆடுகளம் பேட்ஸ்மேனுக்கு நன்கு ஒத்துழைக்கும். ஆனால், ஹைதராபாத் ஆடுகளம் போல் இருக்காது. வேகப்பந்துவீச்சைக் காட்டிலும் சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் நன்கு ஒத்துழைக்கும். தொடக்கத்தில் ஆடுகளம் காய்ந்திருப்பதால் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக பந்துகள் சுழலும், ஆனால், சேஸிங் செய்யும்போது, பந்துவீசுவது கடினமாக இருக்கும். ஆதலால் முதலில் பந்துவீசும் அணி எதிரணியை குறைந்த ஸ்கோருக்குள் சுருட்டினால் சேஸிங் எளிதாக இருக்கும்.