

திருவனந்தபுரத்தில் இன்று மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக நடக்க உள்ள டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 25 ரன்கள் சேர்த்தால் புதிய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.
திருவனந்தபுரத்தில் இன்று இரவு இந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே 2-வது டி20 போட்டி நடக்க உள்ளது. ஹைதராபாத்தில் நடந்த முதலாவது டி20 போட்டியில் கேப்டன் கோலியின் அதிரடியாக 94 ரன்கள் குவிப்பால், இந்திய அணி 209 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.
உள்நாட்டில் நடந்த சர்வதேச டி20 போட்டிகளில் இன்னும் எந்த இந்திய வீரரும் ஆயிரம் ரன்களை எட்டியதில்லை. தற்போது விராட் கோலி 975 ரன்களுடன் உள்ளார்.
இன்று நடக்கும் டி20 போட்டியில் கோலி 25 ரன்கள் சேர்த்தால் உள்நாட்டில் நடந்த சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய பேட்ஸ்மேன் எனும் பெருமையை கோலி பெறுவார்
ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் தற்போது நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 1,430 ரன்களுடன் முதலிடத்திலும், கோலின் முன்ரோ ஆயிரம் ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். தற்போது கோலி ஆயிரம் ரன்களை எட்டினால், சர்வதேச அளவில் ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வீரர் எனும் பெருமைக்கு கோலி சொந்தக்காரர் ஆவார்.
அதுமட்டுமல்லாமல் கேப்டன் விராட் கோலிக்கும், துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இடையே டி20 போட்டிகளில் அதிகமான ரன்களை குவிப்பதில் தொடர்ந்து போட்டி இருந்து வருகிறது
கடந்த சில போட்டிகளாக இருவரும் ஒருவரை ஒருவர் முந்துக்கொள்வதும், பின்தங்குவதும் இருந்து வருகிறது. இந்த வகையில் ரோஹித் சர்மா தற்போது டி20 போட்டிகளில் 2,547 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.
ஆனால், ரோஹித் சர்மாவைக் காட்டிலும் விராட்கோலி 3 ரன்கள் குறைவாக 2,544 ரன்களுடன் உள்ளார். இன்று நடக்கும் 2-வது டி20 போட்டியில் 3 ரன்களுக்கு அதிகமாக கோலி சேர்த்தால் ரோஹித் சர்மா ரன்களை முறியடித்துவிடுவார்.