தெற்காசிய விளையாட்டு: தங்கத்தில் சதம் அடித்தது இந்தியா; 214 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம்

4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணி.
4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணி.
Updated on
2 min read

தெற்காசிய விளையாட்டில் இந்தியா 100 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி உள்ளது.

நேபாளத்தில் நடைபெற்று வரும் இந்த விளையாட்டில் 5-வது நாளான நேற்று மட்டும் 29 தங்கம் உட்பட 49 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். நீச்சலில் இந்தியாவுக்கு 7 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஹரி நட்ராஜ் (100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), ரிச்சா மிஸ்ரா (800 மீட்டர் பிரீஸ்டைல்), சிவா (400 மீட்டர் தனிநபர் மெட்லே), மானா படேல் (100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), சாஹத் அரோரா (50 மீட்டர் பேக்ஸ்டிரோக்), லிகித் (50 மீட்டர் பிரீஸ்ட் ஸ்டிரோக்), ருஜுதா பாத் (50 மீட்டர் பிரீஸ்டைல்) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

ஜெயவீனா (50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்டிரோக்) வெள்ளிப் பதக்கமும், ரிதிமான வீரேந்திர குமார் (100 மீட்டர் பேக் ஸ்டிரோக்) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். நீச்சலில் மட்டும் இதுவரை இந்தியாவுக்கு 30 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தது. ஆடவருக்கான 97 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைலில் சத்யவர்த் கதியான், 125 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைலில் சுமித் மாலிக் ஆகியோரும் மகளிருக்கான 76 கிலோ எடைப் பிரிவில் குர்ஷன்பிரீத் கவுர், 57 கிலோ எடைப் பிரிவில் சரிதா மோர் ஆகியோரும் தங்கப் பதக்கம் வென்றனர்.

துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 தங்கம் கைப்பற்றியது. ஆடவருக்கான 25 மீட்டர் ராப்பிடு பையர் பிஸ்டலில் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார். இதே பிரிவில் அனிஷ் பன்வாலா, பாபேஷ் சேகாவத், ஆதார்ஷ் சிங் ஆகியோரை உள்ளிடக்கிய இந் திய அணி தங்கப் பதக்கம் வென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் மெஹுலி கோஷ், யாஷ் வர்தன் ஜோடி தங்கம் வென்று அசத்தியது.

பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப் பதக்கம் கிடைத்தது. மகளிருக்கான 87 கிலோ எடைப் பிரிவில் அனுராதா பவுன்ராஜ் ஒட்டுமொத்தமாக 200 கிலோ எடையை (90+110) தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். 27 வயதான பவுன்ராஜ் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

81 கிலோ எடைப் பிரிவில் ஷர்ஸ்தி சிங் 190 கிலோ எடையை (82+108) தூக்கி தங்கம் வென்றார்.

தடகளத்தில் கடைசி நாளான நேற்று இந்தியாவுக்கு மேலும் 8 பதக்கங்கள் கிடைத்தது. மகளிருக்கான ஈட்டி எறிதலில் குமாரி ஷர்மிளா (53.64 மீட்டர்) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதேபோன்று மகளிருக்கான 800 மீட்டர் ஆட்டத்தில் லில்லி தாஸ் (2:08.97) வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஆடவருக்கான ஈட்டி எறிதலில் சிவ்பால் சிங் (84.16 ) வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜீவன், சந்தோஷ் குமார், அங்ரெஜ் சிங், ஜபிர் மதரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:08.21 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.

ஆடவருக்கான மராத்தானில் ரஷ்பால் சிங் (2:21:57) வெள்ளிப் பதக்கமும், ஷெர் சிங் (2:22:07) வெண்கலப் பதக்கம் பெற்றனர். அதேவேளையில் மகளிருக்கான மராத்தானில் ஜோதி கவாதே (2:52:44) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் மொகமது அஃப்ஸல் (1:51.25) வெள்ளிப் பதக்கம் வென்றார். தடகளத்தில் மட்டும் ஓட்டுமொத்தமாக இந்தியா 12 தங்கம், 20 வெள்ளி, 15 வெண்கலம் என 47 பதக்கம் கைப்பற்றியது.

கால்பந்து

மகளிருக்கான கால்பந்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் 18-வது நிமிடத்தில் பாலா தேவி கோல் அடித்து அசத்தினார். இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

இந்த வெற்றியால் ரவுண்ட் ராபின் சுற்றில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. நாளை நடை பெறும் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் நேபாளத்துடன் மோதுகிறது.

பதக்க பட்டியல்

6-வது நாளின் முடிவில் இந்தியா 110 தங்கம், 69 வெள்ளி, 35 வெண் கலம் என 214 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது. நேபாளம் 43 தங்கம், 34 வெள்ளி, 65 வெண்கலம் என 142 பதக்கங்களுடன் 2-வது இடம் வகிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in