Published : 08 Dec 2019 10:01 AM
Last Updated : 08 Dec 2019 10:01 AM

திருவனந்தபுரத்தில் இன்று 2-வது டி 20 ஆட்டம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 208 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி கேப்டன் விராட் கோலி (94), கே.எல்.ராகுல் (62) ஆகியோரது அதிரடியால் 8 பந்துகள் மீதம் இருக்க வெற்றியை வசப்படுத்தியது.

இந்த வெற்றியால் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 2-வது டி 20 ஆட்டம் நடைபெறுகிறது. கடந்த 13 மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகடி 20 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பெற்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றியின் எண்ணிக்கையை இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி குழுவினர் அதிகரிக்கச் செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

இது நிகழும் பட்சத்தில் உள்நாட்டில் இந்த ஆண்டில் 2-வது டி 20 தொடரை இந்திய அணிவெல்லும். கடந்த மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றிஇருந்தது. முதல் டி 20-ல் 208 ரன்களை வெற்றிகரமாக விரட்டி சாதனை படைத்த இந்திய அணி மீண்டும் ஒருமுறை ஆதிக்கம் செலுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். ஹைதராபாத் ஆட்டத்தில் 40 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்த கே.எல்.ராகுல் டி 20 ஆட்டங்களில் விரைவாக (29 இன்னிங்ஸ்கள்) ஆயிரம் ரன்களை கடந்த3-வது வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

அதேவேளையில் 50 பந்துகளில் 94 ரன்கள்வேட்டையாடிய விராட் கோலி டி 20 ஆட்டங்களில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருந்தார். இந்த ஜோடி மீண்டும் ஒரு முறை மேற்கிந்தியத் தீவுகளின் பந்து வீச்சை பதம் பார்க்கக்கூடும். ரிஷப் பந்த்தும் பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொண்டு இருசிக்ஸர்களை விளாசியது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. பேட்டிங்கில் அதீத
பலத்துடன் காணப்பட்ட இந்திய அணி பந்துவீச்சு, பீல்டிங்கில் பலம் இழந்து காணப்பட்டது.

வாஷிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா ஆகியோர் சில கேட்ச்களை தவறவிட்டனர். மேலும் பீல்டிங்கில் சில நேரங்களில் இந்திய வீரர்கள் அசட்டுத்தனமாக செயல்பட்டனர். இன்றைய ஆட்டத்தில் இவற்றை சரி செய்வதில் இந்திய அணி தீவிரம் காட்டக்கூடம்.

தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட தீபக் சாஹர் 54 ரன்களை வாரி வழங்கினார். அதே
வேளையில் புவனேஷ்வர் குமார் 36 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் ஏமாற்றம் அளித்தார்.
சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கடைசியாக விளையாடி 6 டி 20 ஆட்டங்களில் 2 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றியுள்ள வாஷிங்டன் சுந்தர் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்படக்கூடும். இது நிகழ்ந்தால் குல்தீப் யாதவ் விளையாடும் லெவனில் இடம் பெறவாய்ப்பு உருவாகும். கெய்ரன் பொலார்டுதலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணிபேட்டிங்கில் மிரளச் செய்திருந்தது. எவின் லீவிஸ், சிம்ரன் ஹெட் மையர், ஜேசன் ஹோல்டர் ஆகியோருடன் பொலார்டும் மட்டையை சுழற்றியிருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு மிரட்டல் ஆட்டம் வெளிப்படக்கூடும்.

அனுபவம் இல்லாத பந்து வீச்சு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பலவீனமாக அமைந்துள்ளது. முதல் ஆட்டத்தில் கெஸ்ரிக் வில்
லியம்ஸ் 3.4 ஓவர்களை வீசி 60 ரன்களை தாரைவார்த்திருந்தார். அதேவேளையில் அனுபவ வீரரான ஜேசன் ஹோல்டர் 46 ரன்களை வழங்கிய நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. ஷெல்டன் காட்ரெல் மட்டுமே ஆறுதல்அளிக்கும் வகையில் பந்துவீசியிருந்தார்.

இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைய அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் உதிரிகள் வாயிலாக விட்டுக்கொடுத்த ரன்களும் முக்கிய காரணம். உதிரிகளாக மட்டும் 23 ரன்களை அந்த அணி தாரை வார்த்திருந்தது. இதனால் பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கட்டுக்கோப்புடன் செயல்படுவது அவசியம்.

இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் மேற்கிந்தியத் தீவுகள் அணி கூடுதல் முனைப்புடன் செயல்பட முயற்சிக்கக்கூடும். போட்டி நடைபெறும் கிரீன்பீல்டு சர்வதேச கிரிக்கெட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் ரன் வேட்டை நிகழ்த்தப்படக்கூடும்.

நேரம்: இரவு 7
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x